சென்னை தேனாம்பேட்டையில் உள்ள போயஸ்கார்டன் பகுதியில் நடிகர் ரஜினிகாந்த் வசித்து வருகிறார்.
அவரை பார்க்கும் ஆசையில் வெளியூர்களில் இருந்து பலர் சென்னை வந்து அவரது வீட்டுக்கு செல்வதுண்டு.
இந்த நிலையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ராமர் என்பவரது மகளான தீபிகா ரஜினியை பார்ப்பதற்காக வீட்டில் பொய் சொல்லி விட்டு சென்னைக்கு வந்துள்ளார்.
15 வயது சிறுமியான அவர் நேற்று காலையில் தனது வீட்டில் இருந்து புறப்பட்டு ஆசிரியர் ஒருவரை பார்த்து விட்டு வருவதாக கூறியுள்ளார்.
பின்னர் சேலத்தில் இருந்து பேருந்து ஏறி சென்னை வந்தார்.
கோயம்பேட்டில் இருந்து போயஸ்கார்டன் பகுதிக்கு ஆட்டோவில் சென்று இறங்கிய தீபிகா, ரஜினிகாந்தின் வீட்டுக்கு சென்று நள்ளிரவில் கதவை தட்டினார்.
ரஜினிகாந்தின் வீட்டு காவலாளி கதவை திறந்து பார்த்தார். அப்போது வெளியில் சிறுமி நிற்பதையடுத்து அவரிடம் விசாரித்த காவலாளி இதுபற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் தீபிகாவை மீட்டு அவர் பெற்றோரிடம் போனில் பேசினர்.
இதில் பல்லாவரம் பம்மல் பகுதியில் பாட்டி சின்னபொன்னு வசித்து வருவது தெரியவந்தது.
இதையடுத்து தீபிகாவுக்கு அறிவுரை கூறி பாட்டி வீட்டில் ஒப்படைத்தனர்.