day, 00 month 0000

பொலிஸ் அராஜகம் ஒழிக; தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வில் போராட்டம்

வடக்கு- கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஆளும் தரப்பு பிரதம கொரடா பிரசன்ன ரணதுங்க, வாராந்த மனுக்களை சபையில் சமர்ப்பித்துக் கொண்டிருக்கும் போதே, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். ஸ்ரீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், இரா. சாணக்கியன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா, வெடுக்குநாறிமலை, ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில், கடந்த மகாசிவராத்திரி தினத்தன்று பொலிஸாரின் அத்துமீறல் மற்றும் ஆலய பூசகர் உள்ளிட்ட எட்டுப்பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் என்பவற்றுக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் விதமாகவே குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

அதன்போது, பிரதிசபாநாயகர் அஜித் ராஜபக்ஷ போராட்டம் நடத்தியவர்களை, அமைதியாக இருக்குமாறு அறிவுறுத்தல் விடுத்திருந்தார்.

எனினும், அவர்கள் தொடர்ச்சியாக பொலிஸ் அராஜகம் ஒழிக என்று கோஷம் எழுப்பி, சபையில் தங்களின் கண்டங்களைத் தெரிவித்திருந்தனர்.

சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்படும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அறிவித்ததையடுத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தை கைவிட்டிருந்தனர்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்