தமிழ் திரையுலகின் நகைச்சவையில் தனித்துவமான பாணியை அறிமுகப்படுத்தி வெற்றிக்கண்ட நடிகர் கவுண்டமணி சிறிய இடைவெளிக்கு பிறகு கதையின் நாயகனாக நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு ஒத்த ஓட்டு முத்தையா என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்', 'கிச்சா வயசு 16' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘ஒத்த ஓட்டு முத்தையா’.
இதில் கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் அன்பு மயில்சாமி, வாசன் கார்த்திக், கஜேஷ்,யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, மாரிமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, முத்துக்காளை, 'எதிர்நீச்சல்' ஜான்சி ராணி, தாரணி, கூல் சுரேஷ், சென்றாயன், லேகா ஶ்ரீ, டி கே ஶ்ரீநிவாசன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஹெக்டர் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். அரசியல் நையாண்டி ஜேனரில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகும் இந்த திரைப்படத்தை ஷஷி பிலிம்ஸ் தயாரிக்கிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் சாய் ராஜகோபால் பேசுகையில், “ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் கதையை கவுண்டமணியிடம் சொன்னபோது மிகவும் மகிழ்ச்சி தெரிவித்ததோடு நடிப்பதற்கும் உடனே சம்மதம் தெரிவித்தார். ஆறு முதல் 60 வரை அனைத்து வயதினரும் ரசிக்கக்கூடிய அரசியல் கலந்த முழுநீள நகைச்சுவை திரைப்படமாக இது இருக்கும். இப்படத்தை ரசிகர்கள் கண்டு மகிழ்ந்து தங்களது பேராதரவை தெரிவிப்பார்கள் என்று நம்புகிறேன்,” என்றார்.