சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன், தனக்கு இருக்கும் படங்களை முடித்துவிட்டு விரைவில் விஜய் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லியோ படத்தில் பிஸியாக நடித்து வரும் நிலையில், சமீபத்தில் தமிழகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டி பரிசுகளை வழங்கியிருந்தார். இந்த நிகழ்ச்சி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விஜயின் செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய், தனுஷ் நடித்த அசுரன் படத்தில் இடம்பெற்ற கல்வி தான் முக்கியம். கல்வியை நம்மிடம் இருந்து யாராலும் எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறியிருந்தார். விஜயின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இது குறித்து அப்போதே கருத்து தெரிவித்திருந்த அசுரன் படத்தின் இயக்குனர் வெற்றிமாறன், படத்தில் வந்த வசனம் ஒரு முன்னணி நடிகரை பாதித்துள்ளது என்றால் நம் சொல்ல வந்ததை தெளிவாக சொல்லியிருக்கிறோம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், சென்னையில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு திரைப்படப் பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன், விரைவில் விஜய் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “நாங்கள் இணைந்து ஒரு படம் செய்வது குறித்து நீண்ட நாட்களாக ஆலோசித்து வருகிறோம். .
விஜய் சார் ரெடி. என் கையில் இருக்கும் கமிட்மென்ட்களை முடித்தவுடன் கண்டிப்பாக சென்று அவரிடம் கதை சொல்வேன். அந்த நேரத்தில் என் கதைகள் அவருக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாக இணைந்து படம் பண்ணுவோம் என்று தெரிவித்துள்ளார். வெற்றிமாறனின் இந்த நம்பிக்கை விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து பேசிய வெற்றிமாறன், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வடசென்னை (2018) படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போதைய வேலைகளை முடித்துவிட்டு முழு கவனத்தையும் செலுத்தி படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கப்படும். “அசுரன் படத்தின் நேரத்திலேயே சூரியுடன் பேச்சு வார்த்தை நடத்தி எனது அடுத்த படத்தில் அவரை நடிக்க வைக்க முடிவு செய்தேன். இதற்காக இரண்டு ஸ்கிரிப்ட்களை உருவாக்க முயற்சித்தேன், இரண்டுமே நான் விரும்பியபடி அமையவில்லை. இறுதியாக விடுதலை படத்தில் இணைந்தோம் என்று தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறனின் விடுதலை முதல் பாகம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. தற்போது விடுதலை பாகம் 2 பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தின் வேலைகள் தொடங்கும் என்றும் இந்த படத்தின் ப்ரீ புரொடக்ஷன் நடந்து கொண்டிருக்கிறது எங்கள் குழு லண்டனில் படத்தின் அனிமேட்ரானிக்ஸ் பணியில் ஈடுபட்டுள்ளது என்றும் இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.