ஒரு படம் தணிக்கை சான்று பெற்றபின் அந்த படத்திற்கு தடை விதிப்பது சரியல்ல என்று தி கேரளா ஸ்டோரி படத்திற்கு நடிகை கங்கனா ரனாவத் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
பாலிவுட் திரையுலகில் சுதிப்தோ சென் இயக்கத்தில் தயாரான படம் தி கேரளா ஸ்டோரி. ஆதா சர்மா, சித்தி இதானி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம், கேரளாவைச் சேர்ந்த 32,000 இந்து பெண்கள் காணாமல் போனதாகவும், அவர்கள் முஸ்லீம் மதத்திற்கு மாற்றப்பட்டு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்த்துவிட்டதாகவும் அதனை அடிப்படையாக வைத்து தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தயாராகியுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
ஆனால் கேரளாவில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்று அம்மாநில அரசு மற்றும் அரசியல் தலைவர்கள் கூறிய நிலையில், படத்திற்கு பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்ப்பையும் மீறி கடந்த மே 5-ந் தேதி வெளியான தி கேரளா ஸ்டோரி படம், தற்போதுவரை இந்திய பாக்ஸ் ஆபிஸில் ₹200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு உத்திரபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை விதிப்பது குறித்து பேசிய பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஒரு படம் தணிக்கைக்கு சென்று சான்றிதழ் பெற்றுவிட்டால் அதனை தடை செய்வது சரியான முடிவாக இருக்காது என்று கூறியுள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள கோவிலுக்கு சென்று தரிசனம் செய்த நடிகை கங்கனா ரணாவத் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்றார்.
அப்போது அவரிடம் தி கேரளா ஸ்டோரி படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) சான்றளித்த ஒரு திரைப்படத்தைத் தடை செய்வது அரசியலமைப்பை அவமதிக்கும் செயலாகும். சில மாநிலங்கள் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை விதித்திருப்பது சரியல்ல” அரசு அமைப்பான தணிக்கைக் குழுவால் படத்துக்கு அனுமதி கிடைத்துவிட்டதால், அதை எதிர்க்கக் கூடாது.
எந்தப் படமும் நல்ல வரவேற்பை பெற்றுவது இண்டஸ்ட்ரிக்கு நல்ல செய்தி. தி கேரளா ஸ்டோரி போன்ற ஒரு படம் உருவாகும் போது மக்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்படுகிறது. பாலிவுட் திரையுலகம், அவர்கள் பார்க்க விரும்பும் திரைப்படங்களாக, அத்தகைய படங்கள் தயாரிக்கப்படுவதில்லை, இந்த படங்கள் உருவாக்கப்பட்டவுடன், அவை வெகுஜன பார்வையாளர்களால் பாராட்டப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.