கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் சிம்பு 48 படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் உலக நாயகன் கமல்ஹாசன் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கடந்த ஆண்டு விக்ரம் என்ற மெகாஹிட் படத்தை கொடுத்தார். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கமல்ஹாசனின் திரை வாழ்க்கையில் பெரிய வெற்றிப்படமாகவும் அமைந்தது.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்து படங்களில் கமிட் ஆகி வரும் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். அதனைத் தொடர்ந்து மணிரத்னம் எச்.வினோத் ஆகியோரின் இயக்கத்தில் நடிக்க உள்ள கமஹாசன் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு படத்தை தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
இதில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படம் தயாரிக்கும் கமல் சிம்பு நடிக்கும் 48-வது படத்தையும் தயாரிக்கிறார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இந்த படத்தை இயக்க உள்ளார். வெந்து தணிந்தது காடு பத்து தல உள்ளிட்ட படங்களுக்கு பிறகு சிம்பு இந்த படத்தில் நடிக்க உள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், இது குறித்து வெளியான டீசர் ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. இதனிடையே தற்போது சிம்பு 48 படத்தில் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்து படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் சிம்பு 48 படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு சிம்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.