day, 00 month 0000

ராகுல் காந்தியின் இல்லத்திற்குச் சென்ற டெல்லி பொலிஸார்

இந்தியாவில் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகி வருவதாக பேசிய அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் விபரங்கள் சேகரிப்பதற்காக டெல்லி பொலிஸார் அவரது இல்லத்திற்கு சென்றுள்ளனர்.

டெல்லி சட்டம் ஒழுங்கு பிரிவு சிறப்பு பொலிஸ் ஆணையர் சாகர் பிரீத் ஹூடா தலைமையிலான பொலிஸ் குழுவினரே இவ்வாறு ராகுல் காந்தி வீட்டுக்கு நேற்றைய தினம் (19.03.2023) சென்றுள்ளனர்.

அண்மையில் ராகுல் காந்தி, ‘பாரத் ஜோடோ யாத்திரை’ நடத்தினார். கன்னியாகுமரியில் ஆரம்பித்து காஷ்மீரில் யாத்திரையை முடித்தார்.

இதன்போது அவர் பேசியதாவது, “நாட்டில் பெண்கள் இன்னமும் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக டெல்லி பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விளக்கமளிக்கும்படி ராகுல் காந்திக்கு மனு அனுப்பியுள்ளனர். ஆனால், அவர் விளக்கம் அளிக்கவில்லை.

இதையடுத்து, டெல்லி சட்டம் ஒழுங்கு பிரிவு சிறப்பு பொலிஸ் ஆணையர் சாகர் பிரீத் ஹூடா தலைமையிலான பொலிஸார், நேற்றைய தினம் டெல்லி துக்ளக் லேன் பகுதியில் உள்ள ராகுல் காந்தியின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

இதன்போது நாட்டில் பெண்கள் இன்னமும் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகி வருவதாக ராகுல் பேசியுள்ளமை தொடர்பான விவரங்களை பொலிஸாருக்கு அவர் அளித்தால்தான் பாதிக்கப் பட்டவர்களை அறிந்து அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியும்’’ என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஆணையர் சாகர் பிரீத் கூறியதாவது: ராகுல் காந்தியைச் சந்தித்து அவர் பேசியது தொடர்பான விபரங்களைக் கேட்டோம். அவரும் பாத யாத்திரையின் போது பேசியது தொடர்பான தேவையான விவரங்களை அளிப்பதாகக் கூறியிருக்கிறார். அதற்குச் சற்று கால அவகாசம் கேட்டுள்ளார்.

மேலும், இதுதொடர்பாக நாங்கள் அளித்த மனுவையும் ராகுல் காந்தியின் அலுவலகத்தினர் பெற்றுக் கொண்டனர். ராகுல் காந்தியிடம் இருந்து விபரங்கள் வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுப்போம் எனக் கூறியுள்ளார்.

ராகுல் காந்தி இல்லத்திற்கு பொலிஸார் சென்றமைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உட்படப் பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்