பிரதான தேர்தல்கள் எவையும் நடைபெறாமல் ஜனாதிபதி பதவியிலோ அல்லது பிரதமர் பதவியிலோ மாற்றங்கள் ஏற்படுத்தப்படமாட்டாது என அரசாங்கம் உத்தியோகபூர்வமாக இன்று அறிவித்துள்ளது.
சுதந்திர மக்கள் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண கடந்த வாரம், மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்குவதற்கு ஆளுந்தரப்பின் எம்.பி.க்கள் சிலர் முயற்சிப்பதாகவும், அதற்கு தமது ஒத்துழைப்பினைக் கோருவதாகவும் தெரிவித்திருந்தார்.
அத்துடன் பிரதமர் பதவிக்கு மஹிந்த ராஜபக்சவினுடைய பெயர் மாத்திரமின்றி, நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா மற்றும் அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோரது பெயர்களும் முன்மொழியப்பட்டுள்ளதாக வெளியான செய்தி தொடர்பாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வி எழுப்பட்டிருந்தது.
அரசாங்கத்தின் முக்கிய பதவிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக செய்திகளை வெளியிட்டு ஊடகங்கள் காலத்தை வீணடித்துக் கொண்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் கடும் பிரச்சினைகள் காணப்படுகின்ற நிலையிலும், இவ்வாறான பிரச்சினைகள் தோற்றுவிக்கப்படுகின்றமையானது காலத்தை வீணடிக்கும் செயற்பாடாகும்.
இதற்கு ஊடகங்கள் முக்கியத்துமளிக்கின்றமையும் கவலைக்குரிய விடயம் என்றும் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.