பிரிக்கப்படாத நாட்டில், அமெரிக்கா, கனடா, இந்தியா ஆகிய நாடுகள் போன்று அதிகாரத்தை மட்டும் பகிர்ந்து வழங்க வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்று, விடுதலைப்புலிகள் கோரிய தமிழீழம் போன்றதையா நீங்கள் கேட்பது என எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“விடுதலைப்புலிகள் கேட்டதைப் போன்று தனியான ஒரு நாட்டை நாம் கோரவில்லை. மாறாக நாட்டைப் பிரிக்காமல் அதிகாரத்தை மட்டுமே பகிர்ந்து கேட்கின்றோம்.
அவர்கள் கேட்டது தனியான ஒரு நாடு. நாம் கேட்பது அப்படியல்ல. நாட்டைப் பிரிக்காமல் சமஸ்டி ஆட்சி முறையைக் கேட்கின்றோம்.
அமெரிக்கா, கனடா, இந்தியா போன்றவை தனிநாடாகப் பிரியவில்லை சமஸ்டி ஆட்சி முறையைக் கொண்ட நாடுகள், அவை தனிநாடாகப் பிரியவில்லை. ஆனால், இந்த சமஸ்டி முறைமையை தனி நாடு என்றே எல்லோரும் எண்ணி அச்சப்படுகின்றனர்” எனவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை நீங்கள் காவல்துறை அதிகாரம் கேட்பது ஏன்? என்றும் மற்றுமொரு கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் பதிலளிக்கையில்,
“காவல் நிலையங்களில் சிங்கள காவல்துறையினர் தான் இருக்கின்றார்கள். இதனால் மொழிப் பிரச்சினை ஏற்படுகின்றது. தமிழர் ஒருவர் காவல் நிலையம் சென்று தமிழில் முறைப்பாடு பதிவு செய்கின்ற போது, சிங்களத்தில் ஒருவர் மொழிபெயர்த்துச் சொல்கின்றார்.
இதனால் முறைப்பாட்டாளர் கூறிய அத்தனை விடயங்களும் திரிவுபடுத்தப்படுகின்றன. இதனால் முறைப்பாட்டாளர் பாதிக்கப்படுகின்றார்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.