day, 00 month 0000

ஜனாதிபதி குறிப்பிட்ட உண்மை விடயங்களை கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் தலைமைகள் பகிரங்கப்படுத்த வேண்டும்

ஒற்றையாட்சி முறைமைக்குள் அதிகார பகிர்வு என ஜனாதிபதி குறிப்பிடுவது கேலிக் கூத்தாக உள்ளது. அதிகார பகிர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்ட உண்மை விடயங்களை அவருடன் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் தலைமைகள் தமிழ் மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே   மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் கூறுகையில் ,

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துகின்றோம். அவர் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் சந்தித்த போது நாட்டில் உள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக கூறியிருந்தார். எனினும் நாங்கள் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற  பிரதமராக இருந்த போது நாங்கள் அவரை சந்தித்தவேளைகளில் அரசியல் தீர்வுக்கான தீர்வு என்ன? என்றும் அவரின் எண்ணங்கள் தொடர்பிலும் கேட்டோம். ஆனால் அவர் சமஷ்டி உள்ளிட்ட நாங்கள் முன்வைத்த விடயங்களை நிராகரித்திருந்தார். அவர் மாவட்ட அபிவிருத்தி சபைகள் தொடர்பிலேயே கதைத்தார்.

ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்களை வழங்க போவததாக அவர் தற்போது கூறியுள்ளார். அவர் கூறுவதை போன்று ஒன்றுபட்ட நாட்டுக்குள் அதிகாரத்தை பகிர்வது என்பது கேளிக்கூத்தானது. அவரை சந்திக்கும் தமிழ்க் கட்சிகள் அவர் என்ன கூறுகின்றார் என்பதனை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். அவர் ஒற்றையாட்சி விடயத்தை கூறி ஏமாற்றுகின்றார். அவரின் கொள்கைப் பிரகனடத்தில் 13 தொடர்பில் எதுவும் கூறவில்லை.

இதேவேளை மாவட்ட அபிவிருத்தி சபை தொடர்பில் கூறுகின்றார். இதன்படி 13 தொடர்பில் அவருக்கு அக்கறை இல்லை என்பதே தெளிவாகின்றது. எவ்வாறாயினும் 13 ஆவது திருத்தத்தை மறுக்கின்றோம். பேச்சுவார்த்தைக்கான ஆரம்பமாகக் கூட பார்க்கவில்லை.

இந்தத் திருத்தம் ஒற்றையாட்சிக்குள் வருவதால் அதில் எந்தத் தீர்வும் கிடைக்கப் போவதில்லை. இதனை எங்களின் கட்சி ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இதனால்தான் நாங்கள் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைகளை நிராகரித்தோம்.

13 ஆவது திருத்தத்தை நாங்கள் மறுக்கின்றோம். ஆனால் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை மறுக்கப் போவதில்லை. 13 ஆவது திருத்தம் தமிழ் மக்களின் இணக்கப்பாட்டை கொண்டதல்ல. இந்தியாவும் இதில் திருப்தியடைவில்லை. சில இணைப்புகள் சேர்க்கப்பட்டதால் இந்தியா அதில் இணங்கியது. ஆனால் நாங்கள் இணங்கவில்லை என்றார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்