day, 00 month 0000

சிங்களவர்களுக்கு எதிராக பேசுபவர்கள் தெற்கில் பாதுகாப்பாக வாழ்கிறார்கள்

இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதனாலேயே சிங்களவர்களுக்கு எதிராக பேசுபவர்கள் தெற்கில் பாதுகாப்பாக வாழ்கிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதியின் அரச கொள்கை விளக்க உரை மீதான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின் போது இது சிங்கள பௌத்த நாடு அல்ல என்று  பாராளுமன்ற உறுப்பின் செல்வராசா கஜேந்திரன் வெளியிட்ட கருத்தொன்று தொடர்பில் ஒழுங்கு பிரச்சினையை எழுப்பி கூறுகையிலேயே சரத் வீரசேகர இவ்வாறு தெரிவித்தார்.

அதன்போது சரத் வீரசேகர மேலும் குறிப்பிட்டதாவது,

''இலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல என்று இவர் கூறுகின்றார். இவர்கள் குருந்தூர் மலையில் உள்ள விகாரைக்கு சென்று மலர் ஒன்றையேனும் வைத்து வழிபடுவதற்கு பிக்குகளுக்கு இடமளிக்கவில்லை. இருந்தும் இவர்கள் இங்கே இப்படி இருப்பது இது சிங்கள பௌத்த நாடு என்பதனாலேயே ஆகும். யாழ்ப்பாணத்தில் சிங்களவர்களுக்கு எதிராக கூறிகொண்டு இங்கே வந்து பாதுகாப்பாக இருப்பதும் இது சிங்கள நாடு என்பதனாலேயே ஆகும் என்பதனை அவருக்கு சொல்லிக்கொடுங்கள்'' என்றார்.

இதனை தொடர்ந்து மீண்டும் உரையாற்றிய  பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் இவரை போன்ற இனவெறியர்களினால்தான் இந்தத் தீவில் இரத்த ஆறு ஓடியது. இந்த நாடு 30 வருடங்களாக பிரிந்திருந்தது. இனவழிப்பை மேற்கொண்டீர்கள். இப்படியானவர்களை விட்டுவிட்டு முற்போக்கான சிந்தனையுள்ள நல்ல மனிதர்களை தேர்ந்தேடுங்கள். பச்சை இனவாதிகளை வைத்துக்கொண்டு நாட்டை கட்டியெழுப்ப முடியாது. இவர் போன்றவர்களாலேயே கோத்தாபய ராஜபக்‌ஷவையே சொந்த மக்கள் விரட்டியடிக்கும் நிலை ஏற்பட்டது. சரத் வீரசேகர போன்ற அடிமுட்டாள்களின் கதைகளை கேட்கவேண்டாம் என்றார். 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்