day, 00 month 0000

"அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன்"

வடக்கு கிழக்கு யுத்தம் முழு நாட்டையும் பாதித்தது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) ஆற்றிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “பல பிரதேசங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. முழுமையான வடக்கு மாகாணமும் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் பல பிரதேசங்கள் யுத்தம் காரணமாக பாரிய துன்பங்களை அனுபவித்தது.

இப்பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பாக கூடுதலான கவனம் செலுத்தப்பட்டு செயற்படுவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம். அப்பிரதேசங்களுக்கான விசேட திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவோம்.

வடக்கில் காணி தொடர்பாக தீர்க்கப்படாத மேலும் பிரச்சினைகள் உள்ளதனை நாம் அறிவோம். பளாளி முகாமுக்காக கையேற்கப்பட்டுள்ள 100 ஏக்கர் காணிகள் அண்மையில் விடுவிக்கப்பட்டன.

மேலும். காணிகள் தொடர்பாக தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளது. அது தொடர்பாக இராணுவம் மற்றும் ஏனைய தரப்பினர்களுடன் கலந்துரையாடப்படுகிறது. ஏனைய பாதுகாப்பு முகாம்களை அண்மித்த காணிகள் தொடர்பிலும் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வடக்கு கிழக்கில் மாத்திரமன்றி நாட்டின் ஏனைய மாகாணங்களிலும் காணிகள் தொடர்பில் பாரதூரமான பிரச்சனை காணப்படுகிறது. இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் காடுகள் பற்றி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

அச் சந்தர்ப்பத்தில் விமானப்படம் அடிப்படையாக கொள்ளப்பட்டது. யுத்தம் மற்றும் ஏனைய காரணங்களால் காடுகளாக்கப்பட்ட கிராமங்களின் பல காணிகள் வனப்பிரதேசங்களாக வர்த்தமானியில் பெயரிடப்பட்டன.

தற்போது யுத்தம் முடிவடைந்துள்ளது. ஆனாலும் தமக்கு உரித்தான பல காணித் துண்டுகள் வனப்பிரதேசங்களாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதால் மக்களுக்கு பாரியளவில் அநீதி இழைக்கப்பட்டுள்ளன.

மொனராகலை தொடக்கம் யாழ்ப்பாணம் வரை மக்கள் இப்பிரச்சனையை எதிர்கொண்டுள்ளார்கள்.

1985 ஆம் ஆண்டின் வரைபடத்தின் பிரகாரம் காடுகள் மற்றும் காணிகளை மீண்டும் வர்த்தமானியில் வெளியிட்டு இந்த அநீதியை சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

காணாமல் போன நபர்கள் தொடர்பாக கண்டறிவதற்கான முறைமையினை நாம் முறைமைப்படுத்தி துரிதப்படுத்துவோம்.

பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பெயரில் சிறைவைக்கப்பட்டுள்ள நபர்கள் பற்றியும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.

எந்தவொரு வழக்கு விசாரணையும் இன்றி பல ஆண்டுகளாக அவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளார்கள். படிப்படியாக இந்த சிறைக் கைதிகளை விடுவிப்பதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம்.“ எனத் தெரிவித்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்