day, 00 month 0000

நேர்காணலின் நடுவே துப்பாக்கியை எடுத்துக் காட்டிய மகிந்தவின் சகா

நேர்காணலொன்றின் நடுவே இடுப்பிலிருந்த துப்பாக்கியை இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த எடுத்துக் காட்டிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சமூக ஊடக செயற்பாட்டாளரான சுதத்த திலகசிறியுடன் இடம்பெற்ற நேர்காணலில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்தர்ப்பத்திலேயே இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தனது இடுப்பில் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்துக் காட்டியுள்ளார்.

அத்துடன், குறித்த துப்பாக்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறப்புரிமையின் கீழ் தனக்குக் கிடைத்த துப்பாக்கி என குறிப்பிட்டுள்ளார்.   

சனத் நிஷாந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெருமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சார்பு முக்கிய அரசியல் பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சனத் நிஷாந்த கடந்த வருடம் மே மாதம் 17ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

கடந்த வருடம் மே மாதம் காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு முன்பாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, சஞ்சீவ எதிரிமான்ன, மிலான் ஜெயதிலக மற்றும் மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உட்பட 22 பேரைக் கைதுசெய்யுமாறு சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபருக்குப் பணிப்புரை விடுத்திருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை சனத் நிஷாந்த நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தி சட்டத்தரணி ஒருவரால் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போது சனத் நிஷாந்த இவ்வாறு நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) கோட்டை நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

 

 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்