day, 00 month 0000

சிங்கள, பெளத்த பேரினவாதம் வேண்டாம் - சுதந்திர தமிழர் தாயகமே வேண்டும்

75 ஆவது சுதந்திர தினத்தை சிங்கள தேசம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது, ஆனால் தமிழ் மக்கள் தங்களது அடிப்படை உரிமைகளைக் கூட பெற முடியாத நிலையில் உள்ளனர் என்று மக்கள் பேரணியில் கலந்துகொண்டிருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 1958 இல் இருந்து முள்ளிவாய்க்கால் வரை தொடர்ச்சியான தமிழ் இனப்படுகொலைகளை அரங்கேற்றி, எம்மை இன்றுவரை அடக்கியாளும் சிங்கள பேரினவாத அரசாங்கத்திற்கு எதிராக இன்றைய சுதந்திர தினத்தை தமிழ் மக்களின் கரி நாளாக்கி போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் பெப்ரவரி 4 ம் திகதி சுதந்திர தினத்திற்கு முன்னர் தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குவதாக சொன்னார், ஆனால் அது தொடர்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் அவரால் எடுக்கப்படவில்லை.

தமிழர்களின் ஆகக்குறைந்தபட்ச கோரிக்கையான சமஸ்டியைக் கூட தர மறுத்து, 13 ஆம் அரசியலமைப்பு சீர்திருத்தத்தையும் நடைமுறைபடுத்த மறுத்து சிங்கள, பெளத்த வெறியர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறார்கள்.

இதற்கு ஒரேவழி, புலம்பெயர்ந்த தமிழர்களும் பங்குபற்றக்கூடிய வகையில் இலங்கை அரசு பொதுசன வாக்கெடுப்பினை நடாத்தி சுதந்திர தமிழர் தாயகத்தை வழங்குவதா? இல்லையா? எனத் தீர்மானிக்க வேண்டும் என எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

சிங்கள பேரினவாதிகளிடம் நாங்கள் தொடர்ச்சியாக பிட்சை கேட்க முடியாது, சர்வதேசத்தின் ஆதரவுடன் எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகவே குறித்த பேரணியை நடாத்திக்கொண்டிருக்கிறோம்.

நாங்கள் அடிமை வாழ்வை ஏற்றுக்கொள்ளத் தயாராகவில்லை, நீங்கள் சுதந்திரமாக வாழ்வது போல தமிழ் மக்களாகிய நாங்களும் சுதந்திரமாக வாழ விரும்புகிறோம், இதுவே இந்த போராட்டத்தின் மூலம் உலக நாடுகளுக்கும், சர்வதேச சமூகத்திற்கும், தென்னிலங்கைக்கும் நாங்கள் சொல்லுகின்ற உரத்த செய்தியாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழர் தாயகப் பகுதிகளில் தொடர்ச்சியாக இடம்பெறும் இராணுவ ஆக்கிரமிப்புக்கள் மற்றும் காணி அபகரிப்புக்கள் நிறுத்தப்பட வேண்டும்.

அந்தியநாட்டு ஏகாதிபத்தியத்திற்கு முன்னரே தமிழர்களாகிய நாங்கள் தனித்தேசமாக, சுதந்திரமாக வாழ்ந்தோம், அதேபோல் மீண்டும் நாங்கள் வாழ விரும்புகிறோம், இதுதான் இன்றைய சுதந்திர தின ஆர்ப்பாட்டப் பேரணியின் செய்தியாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்