பிரபல டென்னிஸ் வீராங்கனையான மார்டினா நவரத்திலோவா, 2 புற்றுநோய் பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கிறார்.
சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் எண்பதுகளில் கோலோச்சியவர் மார்டினா நவரத்திலோவா. தற்போது டென்னிஸ் போட்டிகளின் வர்ணனையாளராக இருந்து வரும் மார்டினா அண்மையில் தொண்டையில் ஏற்பட்ட பாதிப்புகாக மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவருக்கு ஆரம்பநிலையிலான தொண்டை புற்று நோய் அடையாளம் காணப்பட்டது.
அதற்கான சிகிச்சைகளை தொடங்கியபோது, மார்பகத்திலும் புற்று இருப்பது கண்டறியப்பட்டது. உடலின் 2 அவயங்களில் புற்றுநோய் கண்டறியப்பட்டதில், தீவிர மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்கு ஆளாகியிருக்கிறார். எனினும், ’மார்டினாவின் உடலில் அடையாளம் காணப்பட்டிருக்கும் 2 புற்று பாதிப்புகளும் அவற்றின் ஆரம்பநிலையில் இருப்பதால், அவற்றை குணப்படுத்துவது எளிது’ என அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
செக்கோஸ்லோவாக்கியா நாட்டில் பிறந்து அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற மார்டினா நவரத்திலோவா, கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒற்றையரில் 18 மற்றும் இரட்டையரில் 31 என பட்டங்களை குவித்தவர். இன்றைக்கும் டென்னிஸ் மைதானத்தில் நுழையும் வீரர்களுக்கு குறிப்பாக வீராங்கனைகளுக்கு மார்டினா உத்வேகம் அளிப்பவர். 66 வயதில், தற்போதும் விளையாட்டு போட்டிகளின் வர்ணையாளராக, டென்னிஸ் உலகோடு தொடர்பில் இருப்பவர்.
தனது மனிதநேயமிக்க கருத்துக்களால் டென்னிஸ் மைதானத்துக்கு அப்பாலும் அபிமானிகளை வென்றிருப்பவர் மார்டினா. அவரது இரட்டை புற்றுநோய் பாதிப்பை அடுத்து, மார்டினாவுக்கு பிரார்த்தனை செய்வதாக ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். மார்டினா முன்னதாக, 2010-ல் மார்பக புற்று பாதிப்புக்கு ஆளாகி அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.