இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை பங்களாதேஷ் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய பின்னர் அஞ்சலோ மெத்யூஸ் டைம் அவுட் முறையில் வெளியேறியதை பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் கேலி செய்தார்.
இந்தத் தொடரின் வெற்றிக்குப் பிறகு இலங்கை அணியை பங்களாதேஷ் அணி ட்ரோல் செய்ததால் இரு நாடுகளுக்கு இடையேயான போட்டி சூடுப்பிடித்துள்ளது.
பாம்பு நடனக் கொண்டாட்டம் முதல் டைம் அவுட் கொண்டாட்டம் வரை, கிரிக்கெட் உலகில் மிகவும் பொழுதுபோக்கு போட்டி ஒன்றில் மற்றொரு அத்தியாயமாக இந்தப் போட்டி அமைந்திருந்தது.
ஒட்டுமொத்த பங்களாதேஷ் அணியும் கிண்ணத்துடன் போஸ் கொடுக்க வந்த நிலையில், ரஹீம் தலைக்கவசத்தைப் பிடித்தபடி அணியை நோக்கி நடந்தார். தலைக்கவசத்தில் ஏதோ தவறு இருப்பது போல் அவர் நடித்தார்.
அத்துடன், 2023 உலகக் கிண்ண தொடரின் போது இலங்கை அணி வீரர் அஞ்சலோ மெத்யூஸ் டைம் அவுட் முறையில் ஆட்டமிழக்கச் செய்யப்பட்டதை அவர் கடுமையாக ட்ரோல் செய்தார்.
அஞ்சலோ மெத்யூஸ் எப்படி வெளியேற்றப்பட்டார்?
முன்னதாக, இலங்கை அணி பங்களாதேஷூக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற பணக்கில் கைப்பற்றியதை தொடர்ந்து கைக் கடிகாரத்தில் தட்டி கொண்டாடியது.
இது உலகக் கிண்ணத்தில் இருந்து அதிகம் பேசப்பட்ட டைம் அவுட் சம்பவத்தை நேரடியாக சுட்டிக்காட்டுவதாக அமைந்திருந்தது. இதற்கு பங்களாதேஷ் வீரர்கள் இன்று பழிவாங்கியுள்ளனர்.
இந்நிலையில், மார்ச் 22 முதல் தொடங்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டியில் யார் யாரை பழிவாங்குவார்கள் என்ற சுவாரஸ்யம் ஏற்பட்டுள்ளது.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான உலகக் கிண்ணப் போட்டியின் போது ஒரு வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
கிரிக்கெட் வரலாற்றில் டைம் அவுட் முறையில் வெளியேற்றப்பட்ட முதல் வீரர் என்ற பெருமையை மெத்யூஸ் பெற்றார். மெத்யூஸ் தலைக்கவசத்தில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக உரிய நேரத்தில் களமிறங்க முடியவில்லை.
பங்களாதேஷ் அணி தலைவர் ஷகிப்-அல்-ஹசன், சூழ்நிலையை முழுமையாகப் பயன்படுத்தி, மெத்யூஸின் ஆட்டமிழப்புக்கு முறையிட்டார்.
கிரிக்கெட் ஆட்ட விதிகளின்படி, அஞ்சலோ மெத்யூஸ் ஒரு பந்தை கூட சந்திக்காமல் பெவிலியன் திரும்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.