// print_r($new['title']); ?>
day, 00 month 0000

டிசம்பர் 9 இற்கு பிறகு தேர்தல் அறிவிப்பு வெளியாகும் சாத்தியம்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை 2023 மார்ச் 20 ஆம் திகதிக்குள் நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய தேர்தல் ஆணைக்குழு உறுதியளித்துள்ளது.

இதற்கமைய டிசம்பர் 9 ஆம் திகதிக்கு பிறகு தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விடுக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது.

தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (15) இடம்பெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர லங்கா சபாகய, டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை, அநுரபிரியதர்சன யாப்பா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் மேற்படி சந்திப்பில் பங்கேற்றனர்.

இதன்போது உரிய காலப்பகுதிக்குள் உள்ளாட்சிசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தும் எதிரணிகளின் கூட்டு பிரகடனம் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டது.

அத்துடன், தேர்தலை பிற்போடும் அரசியல் முயற்சியை தோற்கடிக்க தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வேளையிலேயே மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தல் நடத்தப்படும் என்ற உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

மார்ச் 20 ஆம் திகதிக்குள் தேர்தல் நடத்தப்படுவதாக இருந்தால் டிசம்பர் 9 மற்றும் ஜனவரி 9 இற்கு இடைப்பட்ட காலத்தில் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டினார்.

தேர்தலை பிற்போடுமாறு அரச தரப்பில் இருந்து தனக்கு எவ்வித அழுத்தமும் வரவில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் குறிப்பிட்டார். எனவே, உரிய காலத்தில் தேர்தல் நடக்கும் என நம்புகின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார நம்பிக்கை வெளியிட்டார்.

மேற்படி கூட்டு பிரகடனத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி, தேசிய மக்கள் சக்தி, முன்னிலை சோசலிஷக் கட்சி என்பனவும் கைச்சாத்திட்டுள்ளன.

அதேவேளை, உள்ளாட்சிசபைத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசு முற்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

எல்லை நிர்ணயம் என்ற போர்வையில் தேர்தலை பிற்போடப்படலாம் என எதிரணிகள் அஞ்சுகின்றன.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டம் அமுலுக்கு வந்துள்ள நிலையில் தேர்தல் ஆணைக்குழு உட்பட சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட வேண்டும். அவை நிறுவப்படும்வரை தற்போதைய உறுப்பினர்கள் பதவியில் நீடிப்பார்கள். எனினும், தேர்தல ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமித்து, அதன் ஊடாக தேர்தலை பிற்போடும் நடவடிக்கையை ஆளுங்கட்சி முன்னெடுக்கலாம் என்ற சந்தேகமும் எதிரணிகளுக்கு உள்ளன. எனவே, தற்போது உள்ள உறுப்பினர்கள், தேர்தல் ஆணைக்குழுவில் தக்கவைத்துக்கொள்வதற்கான முயற்சியும் இடம்பெறுகின்றது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்