day, 00 month 0000

ஊமையாய் வாழும் வாழ்வு இனியும் தொடராது - ஆரம்பமானது அரசியல் தீர்வுக்கான போராட்டம்!

கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வினை வலியுறுத்தி வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவால் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டம் இன்று வவுனியா குருமன்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நாம் நாட்டை துண்டாடவில்லை கௌரவமான தீர்வையே கேட்கின்றோம், செவிடராய் குருடராய் ஊமையாய் ஒரு வாழ்வு இனியும் தொடராது போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

அதன் போது ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் சிறுபான்மை தமிழ் மக்களான நாம் ஆட்சிக்கு வந்த பெரும்பான்மை அரசுகளின் இனவாதக் கொள்கைகளால் பல்வேறு வழிகளிலும்அடக்கப்பட்டு வந்துள்ளோம்.
தமிழருக்கான அரசியல் தீர்வு கோரி போராட்டம்

அது இன்றுவரை தொடர்கிறது. இதுவே தமிழ் மக்கள் தமக்கான அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப் பரவலாக்கம் குறித்து சிந்திக்கத் தூண்டியது.

இதன் நியாயத்தன்மையை பிராந்திய நட்பு நாடான இந்தியாவும் சர்வதேச நாடுகளும் என்றோ ஏற்றுக்கொண்டுள்ளன.

அந்தவகையில் வடகிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வு அதிகாரப்பரவலாக்கம், என்பது இலங்கையின் அரசியலமைப்பின் அங்கமாக இருப்பதுடன், சர்வதேச சமூகத்தினாலும் ஐக்கியநாடுகள் சபையினாலும் வரவேற்கப்படுகின்ற ஒன்றாகும்.
சாத்வீகமான ஜனநாயகத்தின் அவசியம்

ஆகவே எமக்கான உரிமையை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை சிறிலங்கா அரசுக்கும் நட்பு நாடான இந்தியாவிற்கும் சர்வதேச நாடுகளுக்கும் வலியுறுத்திக் கொண்டு வடகிழக்கு வாழ் மக்களான நாம் எமது சாத்வீகமான ஜனநாயகமான நூறுநாட்கள் செயல்முனைவை ஆரம்பித்திருக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளனர்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்