ரி20 உலக கிண்ண துடுப்பாட்ட போட்டியில் விளையாட அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த இலங்கையின் அணியின் சகல துறை விளையாட்டு வீரர் சாமிக்க கருணாரத்ன, சிட்னி நகரில் கெசினோ சூதாட்ட விடுதி ஒன்றில் மோதலை ஏற்படுத்திக்கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
கெசினோ சூதாட்ட நிலையத்தில் இருந்த ஒருவரை சாமிக்க கருணாரத்ன தாக்கியுள்ளதாகவும் கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக மற்றும் ஷானுக ராஜபக்ச ஆகியோர் தலையிட்டு சமரசம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
போட்டியில் விளையாட அவுஸ்திரேலியாவுக்கு சென்ற இலங்கை துடுப்பாட்ட அணிக்கு விருந்துகளில் கலந்துக்கொள்ளுமாறு சுமார் 20 அழைப்புகள் கிடைத்துள்ளது.
எனினும் அணியின் முகாமைத்துவம் 5 விருந்துகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியிருந்தது.
எனினும் சில துடுப்பாட்ட வீரர்கள், அணியின் முகாமையாளரை ஏமாற்றி வரம்பு மீறி நடந்துக்கொண்டதாகவும் சில வீரர்கள் வரையறுக்கப்பட்ட நேரத்தை கடந்தே தங்கியிருந்த விடுதி அறைகளுக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சூதாட்ட மண்டபத்தில் ஏற்பட்ட மோதலில் இலங்கை அணி வீரர் Chamika Karunaratne க்கு எதிராக குற்றம் உறுதி செய்யப்பட்டால்,ஒரு வருடத்திற்கும் அதிகமான சர்வதேச போட்டித்தடை விதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.