இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) வெள்ளை பந்து கிரிக்கெட்டுக்கு இரண்டு தனித்தனி கேப்டன்களை நியமிக்க ஆலோசித்து வருகிறது. இதன் மூலம் மற்ற நாடுகளை போல இந்திய அணியிலும் தனி தனி கேப்டன்கள் வர உள்ளனர். இந்த திட்டம் ஜனவரி முதல் இலங்கைக்கு எதிரான சொந்த தொடரிலிருந்து செயல்படுத்தப்பட உள்ளது. இரு அணிகளுக்கும் தனித்தனி கேப்டன்களுடன் இலங்கைக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இந்தியா விளையாடவுள்ளது. ஒருநாள் போட்டிக்கு ரோஹித் சர்மாவும், டி20யில் ஹர்திக் பாண்டியாவும் இந்திய அணியை வழிநடத்துவார்கள் என்று கூறப்படுகிறது.
“ODI மற்றும் T20 அணிகளுக்கு தனித்தனி கேப்டன்களை நியமிப்பது சரியான வழியா என்பதை நாங்கள் ஆலோசித்து வருகிறோம். இது ஒருவரிடமிருந்து சுமைகளை அகற்ற உதவும். 2023 இல் இந்தியாவில் ODI உலகக் கோப்பையை அடுத்து T20 க்கு புதிய அணுகுமுறையும் அதே நேரத்தில் நிலைத்தன்மையும் தேவை. இந்த திட்டம் ஜனவரி முதல் நடைமுறைக்கு வரலாம். நாங்கள் ஆலோசித்து இறுதி அழைப்புகளை எடுப்போம்” என்று பிசிசிஐ உயர் அதிகாரி ஒருவர்தெரிவித்துள்ளார். புத்தாண்டு தொடக்கத்தில் இந்தியா இலங்கைக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதைத் தொடர்ந்து நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஹோம் தொடரில் விளையாடுகிறது. ஹர்திக் பாண்டியா நிரந்தர டி20 கேப்டனாக ஜனவரி முதல் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை ரோஹித் சர்மா வழிநடத்துவார்.
இரண்டு கேப்டன்களை நியமிப்பதற்கான சாத்தியமான படி, டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் மோசமான ஆட்டம் ரோஹித் சர்மாவின் டி20 கேப்டன் பதவியை இழக்க நேரிடும் என்பது தெளிவாகிறது. மேலும், அடுத்த டி20 உலகக் கோப்பை 2024ல் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதனால் அணியில் உள்ள பெரும்பாலான சீனியர் வீரர்கள் படிப்படியாக நீக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிசிசிஐ அதிகாரி கூறுகையில், "நாங்கள் தனிநபர்களைப் பற்றி கவலைப்படவில்லை. இந்திய கிரிக்கெட், இந்திய அணி குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம்" என்று கூறினார்.