day, 00 month 0000

நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தெரிவானது பாகிஸ்தான்

 டி20 உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

டி20 உலக கோப்பை போட்டியின் முதல் அரையிறுதி போட்டி இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது, இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

நியூசிலாந்து அணியில் முக்கிய வீரர்களான பின் ஆலன், கான்வே மற்றும் க்ளென் பிலிப்ஸ் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் வெளியேற, கேப்டன் வில்லியம்சன் மற்றும் டேரில் மிட்செல் ஜோடி அணியின் ஓட்டத்தை சீராக உயர்த்தினர்.

கேப்டன் வில்லியம்சன் 42 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்சருடன் 46 ஓட்டங்கள் குவித்தார், டேரில் மிட்செல் அதிரடியாக 35 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் 53 ஓட்டங்கள் குவித்தார்.

முதல் பகுதியின் இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்கள் குவித்து இருந்தது.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை, ஷஹீன் அப்ரிடி 4 ஓவர்கள் பந்து வீசி 24 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 153 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் ஆரம்பம் முதலே வீரர்கள் அதிரடியாக விளையாடிய தொடங்கினர்.

கேப்டன் பாபர் ஆசாம் 42 பந்துகளை எதிர்கொண்டு 53 ஓட்டங்களையும், முகமது ரிஸ்வான் 43 பந்துகளை எதிர்கொண்டு 57 ஓட்டங்களையும் குவித்தனர்.

இதனால் பாகிஸ்தான் அணி 153 என்ற இலக்கை 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி பெற்றுள்ளது.

முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றதுடன் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்தியா-இங்கிலாந்து இடையே நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி பாகிஸ்தானை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.  


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்