அவுஸ்ரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் இன்றுடன் நிறைவு பெற்றன. இதில் குழு 1ல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குழு 2ல் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளன. இந்நிலையில், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற சூப்பர் லீக் சுற்று கடைசி ஆட்டத்தில் இந்தியா, சிம்பாப்வே அணிகள் விளையாடின.
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தை செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 15 ஓட்டம் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மற்றொரு வீரர் கே.எல்.ராகுல் 35 பந்துகளில் 51ஓட்டம் குவித்த நிலையில் பெவிலியன் திரும்பினார். கோலி 26ஓட்டம் அடித்தார். வழக்கம் போல் அதிரடி காட்டிய சூரியகுமார் யாதவ் 25 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் 61 ஓட்டம் குவித்து களத்தில் இருந்தார்.
தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக களம் இறங்கிய ரிஷப் பண்ட் 3 ஓட்டம் விக்கெட்டை பறிகொடுத்தார். ஹர்திக் பாண்ட்யா 18 ஓட்டம் அடித்தார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ஓட்டம் எடுத்தது. இதையடுத்து 187 ஓட்டம் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சிம்பாப்வே 17.2 ஓவர் முடிவில் 115 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளை யும் இழந்தது . அதிகபட்சமாக அந்த அணியின் ரியான் பர்ல் 35 , சிக்கந்தர் ராசா 34 அடித்தனர்.
மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். இந்தியா தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்களும், சமி, ஹர்திக் தலா 2 விக்கெட்களும், புவனேஷ்வர் குமார், அர்ஸ்தீப்சிங், அக்சர் படேல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து 71 ஓட்ட வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது
தற்போது அரையிறுதிக்கு இந்தியா,பாகிஸ்தான்,நியூசிலாந்து,இங்கிலாந்து போன்ற அணிகள் தேர்வாகி உள்ள நிலையில் முதல் அரையிறுதி போட்டி நவம்பர் 9 பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கும் நவம்பர் 10 இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் மற்றொரு அரையிறுதி போட்டியில் மோத காத்திருக்கின்றன