அமெரிக்க கிரீன் கார்ட் (Green Card) என அறியப்படும் பன்முகத்தன்மை விசா திட்டமானது ஆரம்பமாகி நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், இந்த விசா திட்டம் தொடர்பில் அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.குறிப்பாக இந்த திட்டத்திற்காக விண்ணப்பிப்பவர்களுக்கே குறித்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை அமெரிக்க தூதரகத்தின் இணையத்தளம் வழியாக சமர்ப்பிக்கலாம் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது விண்ணப்பிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் சிலருக்கு “Error” என்ற பதில் கிடைப்பதாக தெரியவருகிறது.
இந்த விசா திட்டத்திற்காக பதிவு செய்வதற்கான உலகளாவிய தேவை அதிகம் என்பதாலேயே இவ்வாறான பதில் கிடைக்கின்றது. எனவே விண்ணப்பதாரிகள் தயவு செய்து பொறுமையாக, தொடர்ந்து முயற்சி செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்றைய தினம் டுவிட்டர் பதிவொன்றில் அறிவித்துள்ளது.
பன்முகத்தன்மை விசா திட்டத்திற்கான விண்ணப்பமானது கடந்த ஐந்தாம் திகதி இரவு 09.30 மணி முதல் திறக்கப்பட்டதுடன், எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதி இரவு 10.30 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
பன்முகத்தன்மை விசா திட்டம் மூலம் ஒவ்வொரு வருடமும் எழுந்தமானமாக 50,000 இற்கும் மேற்பட்ட நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
எனினும் நிரந்தர குடியுரிமை பெறுவதற்காக அமெரிக்காவிற்கு அதிகளவில் புலம்பெயர்ந்தோரை அனுப்பாத நாடுகளில் இருந்து மட்டுமே இவர்கள் தெரிவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.