day, 00 month 0000

சுமந்திரன் எம்.பி யை கொலை செய்ய முயற்சித்த சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 4 சந்தேகநபர்களையும் பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் ,ரணித்தா ஞானராஜா,சுரங்க பண்டார,சுவாதிகா ரவிச்சந்திரன் ஆகியோர் மன்றில் தோன்றினர்.

இதனையடுத்து சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் அவர்களினால் சந்தேக நபர்கள் நால்வர் சார்பான பிணை விண்ணப்பம் திறந்த மேல் நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து அரசதரப்பு சட்டத்தரணியினால் அரச தரப்பு வாதம் மன்றில் முன்வைக்கப்பட்டது.

இரெண்டு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரட்ன சந்தேக நபர்கள் நால்வருக்கும் நிபந்தனையுடன் கூடிய பிணையினை வழங்கினார்.

பிரமுகர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்தமை, சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் என்பவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மேலும் இவர்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்