அரசாங்கம் திருச்சபைக்கு வழங்கிய உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் முக்கியமான 1500 பக்கங்கள் காணப்படவில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஆறு சிடிக்களில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை வழங்கியது நாங்களும் சட்டத்தரணிகளும் அதனை ஆராய்ந்தோம் 70,000 பக்கங்கள் உள்ளன எனினும் அரசாங்கம் 1500 பக்கங்களை எங்களுக்கு வழங்கவில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
ஜஹ்ரான் ஹாசிமின் மனைவி மற்றும் சாரா ஜெஸ்மின் போன்ற முக்கிய சாட்சியங்களினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அடங்கிய ஆவணங்களையே அரசாங்கம் எங்களிடம் வழங்காமல் தான் வைத்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட குழுவினருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர் என கூறப்படும் ஜாரா ஜஸ்மின் வழங்கிய வாக்குமூலம் குறித்த அறிக்கைகளை அரசாங்கம் எங்களிற்கு வழங்கவில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
உயிர்த்தஞாயிறுதாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை முழுமையாக வழங்கவேண்டும் என நாங்கள் பல முறை கடிதங்களை எழுதிய பிறகு அரசாங்கம் ஆறுசிடிக்களை வழங்கியது என தெரிவித்துள்ள கர்தினால் முழு அறிக்கையையும் வழங்கிவிட்டதாக ஊடகங்களிற்கு தெரிவித்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர்கள் அதிகாரிகள் 99 வீத விசாரணைகள் முடிவடைந்துவிட்டன என தெரிவிக்கின்றனர் எனினும் நாங்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகளை ஆராய்ந்தவேளை அது உண்மையில்லை என்பதை உணரமுடிந்தது எனவும் குறிப்பிட்டுள்ள கர்தினால் ஜஹ்ரானை அவரின் குழுவை சேர்ந்தவர்களை தெரிந்த 23 முஸ்லீம்களிற்கு எதிராக தற்போது வழக்குதாக்கல் செய்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதல் குறித்த அனைத்து விடயங்களையும் விசாரணை செய்வதை தவிர்த்துள்ள அரசாங்கம் தற்போது இவர்களை பலிகடாக்களாக்க முயல்கி;ன்றது எனவும் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறுதாக்குதல் இடம்பெற்று இந்த வருடத்துடன் ஐந்து வருடங்களாகின்றன நாங்கள் புதிய சுயாதீன விசாரணைகளை கோரிவரும் நிலையில் அதிகாரிகள் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் திட்டங்களை முன்வைக்கின்றனர் என தெரிவித்துள்ள கர்தினால் மல்கம் ரஞ்சித் இதேவேளை ஆசாத் மௌலானா போன்றவர்கள் வெளியிட்ட தகவல்கள் மூலம் வெளியான புதிய ஆதாரங்கள் குறித்து எந்த விசாரணைகளும் இடம்பெறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வேளை இராணுவபுலனாய்வு பிரிவின் இயக்குநருக்கும் ஜஹ்ரான் குழுவினருக்கும் இடையில் தொடர்பினை ஏற்படுத்துவதில் தான் ஈடுபட்டமை ஆசாத்மௌலானா உறுதி செய்துள்ளார் இராணுவ புலனாய்வு பிரிவினர் வழங்கிய நிதியை பிள்ளையான் ஊடாக பெற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார் எனவும் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இராணுவபுலனாய்வு பிரிவின் தலைவராக செயற்பட்டவருக்கும் ஜஹ்ரான் காசிம் குழுவினருக்கும்இடையி;ல் சந்தி;ப்பு இடம்பெற்றது என்ற புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன தென்பகுதி அதிவேக நெடுஞ்சாலையி;ல் கௌனிஹமவில் சந்தேகத்திற்கு இடமான பொருட்களுடன் காணப்பட்ட லொறியை சோதனை செய்யாமல் விடுமாறு தற்போதைய பொலிஸ்மா அதிபர் அவ்வேளை உத்தரவு பிறப்பித்துள்ளார்,எனவும் தெரிவித்துள்ள கர்தினால் அந்த லொறி கோட்டபயவுக்கு நெருக்கமான அவன்ட் கார்டே நிறுவனத்திற்கு சொந்தமானது எனவும் குறிப்;பிட்டுள்ளார்.
அந்த லொறியில் வெடிமருந்துகள் காணப்பட்டிருக்கலாம் என ஆசாத்மௌலானா தெரிவித்திருந்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.