உத்தேச தேசிய தேர்தல்களை மையப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் சுமூகமானதாக அமையவில்லை. இவ்வாறானதொரு நிலையில் ஜனாதிபதி தேர்தல் முதலில் இடம்பெறுமேயானால் ரணில் விக்கிரமசிங்கவுக்கான ஆதரவை வாபஸ் பெற்று, தனித்து வேட்பாளர் ஒருவரை களமிறக்க தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம் ஜனாதிபதிக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, அவ்வாறு ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை தனித்து பொதுஜன பெரமுன களமிறக்கும் பட்சித்தில் அவர், ராஜபக்ஷ ஒருவராக இருக்க மாட்டார் என்ற ஒருமித்த இணக்கப்பாடும் எட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணிலுக்கும், பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்ற அண்மைய சந்திப்பு இருதரப்பு உறவில் கடும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ மாத்திரமன்றி அன்றைய சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் இளைய சகோதரரான யோஷித ராஜபக்ஷவும் கலந்துகொண்டிருந்ததாக விசேட தகவல் மூலம் குறிப்பிட்டது.
இந்த இருதரப்பு கலந்துரையாடல் முழு அளவில் உத்தேச தேர்தல்களை மையப்படுத்தியதாகவே அமைந்தது. பாராளுமன்ற தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என்ற அழுத்தத்தை பஷில் ராஜபக்ஷ கடுமையாக முன்வைத்திருந்தார். ஆனால், ஜனாதிபதி சில விடயங்களை குறிப்பிட்டு, அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல்கள் இடம்பெற வேண்டும் என்றும், முதலில் ஜனாதிபதி தேர்தல் ஊடாக தாம் விரும்பும் தலைவரை தெரிவு செய்யும் உரிமையை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். இதுவே இன்றைய சூழலில் சிறந்தது என்ற விடயத்தையும் தெளிவுப்படுத்தியிருந்தார்.
ஆனால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இதனை மறுதளித்து பாராளுமன்ற தேர்தலை வலியுறுத்தியது. மறுபுறம் பொதுஜன பெரமுனவுக்குள் ஏற்பட்டுள்ள கடும் பிளவுகளுக்கு ஜனாதிபதி ரணிலின் அணுகல்கள் பிரதான காரணம் என்ற விடயமும் கட்சியின் உள்ளக கலந்துரையாடல்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையிலேயே ஜனாதிபதி தேர்தல் முதலில் நடப்படுமாயின், பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணிலுக்கான ஆதரவை வாபஸ் பெற்று தனித்து வேட்பாளரை களமிறக்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.