day, 00 month 0000

கண்துடைப்பு நாடகமாக மீண்டும் ஓர் ஆணைக்குழு

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக கடந்த காலத்தில் அமைக்கப்பட்ட பல ஆணைக்குழுக்கள் எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்காத நிலையில், புதிதாக அரசாங்கம் அமைக்க உத்தேசித்துள்ள இலங்கை உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் கடும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

“அரசாங்க ஆணைக்குழுக்களின் எண்ணிக்கை பாதிக்கப்பட்ட இலங்கையர்களால் கணக்குவைக்க முடியாத எண்ணிக்கைளைத் தாண்டியுள்ளது. இருந்தும் பிறிதொரு ஆணைக்குழு உருவாக்கப்படவுள்ளது.” என உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உண்மையை கண்டறிதல் மற்றும் பொறுப்புக்கூறல் என்ற பெயரில் இலங்கை அரசாங்கத்தால் கடந்த காலத்தில் உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் வரிசையில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவும் இணைந்துகொண்டுள்ளது.

“உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு எனப்படும் இப்புதிய ஆணைக்குழு, உண்மையைக் கண்டறிவதற்காக சிறிலங்கா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட குறைந்தது 36 ஆணைக்குழுக்களைக் கொண்ட வரிசையில் புதிதாக இணைந்துள்ளது.”

உதாரணமாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழு என்பனவற்றைக் கூறலாம்.

எவ்வாறெனினும் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் இதுவரை எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கடந்தகாலத்தில் விசாரணைகளை முன்னெடுத்த ஆணைக்குழுக்களில் மூன்றில் ஒரு பகுதி தமது அறிக்கைகளை கூட வெளியிடவில்லையென, உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் குறிப்பிட்டுள்ளது.

ஆணைக்குழுக்களினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களும் எழுத்துவடிவிலே காணப்படுகின்றன. அவற்றை நடைமுறைப்படுத்த ஆட்சியாளர்கள் முன்வரவில்லை.

தொடரும் போராட்டங்கள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் தொடர் போராட்டம் எட்டு வருடங்களைக் கடந்து தொடர்ந்த வண்ணம் உள்ளது. தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ளாமலேயே 240ற்கும் மேற்பட்ட உறவினர்கள் உயிரிழந்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணைக்கு உட்படுத்த நம்பகமான அமைப்பு வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் விரும்புவதோடு, மீண்டும் நிகழாமை குறித்த இலங்கை அரசாங்கத்தின் உத்தரவாதத்தை எவ்வாறு நம்புவது? என்ற கேள்வியையும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்