குருந்தூர் மலை விவகாரத்தில் கை வைத்து நாட்டில் மீண்டும் இனவாதத்தை தோற்றுவிப்பதை ராஜபக்ஷர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
தமிழ் தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சுமுகமாக இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும். பௌத்த கொடியை பயன்படுத்த ராஜபக்ஷர்களுக்கு தார்மீக உரிமை ஏதும் கிடையாது என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
மஹரக பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ராஜபக்ஷர்களுக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் போது அவர்களது சகாக்கள் 'ராஜபக்ஷர்கள் 30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததால் சர்வதேச மட்டத்தில் நெருக்கடிக்குள்ளாக்கப்படுகிறார்கள்.
சிங்கள பௌத்த தலைவர்களை பாதுகாக்க வேண்டும் 'என குறிப்பிடுகிறார்கள். 2019 ஆம் ஆண்டும் ராஜபக்ஷர்கள் சிங்கள பௌத்த தலைவர்களாக சித்தரிக்கப்பட்டார்கள். இறுதியில் முழு நாடும் வங்குரோத்து நிலையடைந்தது.
நாட்டின் இறையான்மை, புத்தசாசனம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்த ராஜபக்ஷர்கள் உண்மையில் நாட்டின் இறையான்மையையும், புத்தசாசனத்தையும் பாதுகாக்கவில்லை. தமது குடும்ப நலனுக்காக சர்வதேச மட்டத்தில் நாட்டின் இறையான்மையையை விட்டுக் கொடுத்தார்கள்.
வங்குரோத்து நிலையடைந்துள்ள நாட்டை மீட்பதற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை எதிர்வரும் நாட்களில் முன்னெடுப்போம்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் மரபுரிமைகள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றன.
ராஜபக்ஷர்கள் தலையிட்டால் மாத்திரமே குருந்தூர் மலை விவகாரத்துக்கு ஒரு தீர்வு காண முடியும் என்ற நிலைப்பாட்டை தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள்.குருந்தூர் மலை விவகாரத்தில் கை வைத்து நாட்டில் மீண்டும் இனவாதத்தை தோற்றுவிப்பதை ராஜபக்ஷர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
குருந்தூர் மலை விவகாரம் குறித்து தமிழ் தலைமைகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சுமுகமான தீர்வு காண வேண்டும்.பௌத்த கொடியை பயன்படுத்த ராஜபக்ஷர்களுக்கு தார்மீக உரிமை கிடையாது என்றார்.