day, 00 month 0000

பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான அர்த்தமுள்ள நடவடிக்கைகள் அவசியம்; மனித உரிமைகள் பேரவையில் வலியுறுத்தல்

இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துவதற்கு அவசியமான அர்த்தமுள்ள நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமானது. 

இங்கு ஐ.நா மனித உரிமைகள் பதில் உயர்ஸ்தானிகர் நாடா அல்-நஷீஃப்பின் உரையைத் தொடர்ந்து ஏனைய நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் உரையாற்றினர்.

அதன்படி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் சார்பில் பேரவையில் உரையாற்றிய பிரதிநிதி, அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கும், ஒன்றுகூடுவதற்குமான பொதுமக்களின் உரிமைக்கு இலங்கை அரசாங்கம் மதிப்பளிக்கவேண்டும் என வலியுறுத்தினார். 

அதேபோன்று வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் நீண்டகாலமாக உண்மை மற்றும் நீதிக்காகக் காத்திருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கும் அதேவேளை பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துவதற்கு அவசியமான அர்த்தமுள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்றார்.

 அதேவேளை அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, வட மெசிடோனியா, மாலாவி மற்றும் மொன்ரனேக்ரோ ஆகிய இணையனுசரனை நாடுகளின் சார்பில் உரையாற்றிய பிரிட்டன் பிரதிநிதி, இலங்கையில் அதிகாரப்பகிர்வு மற்றும் காணி விடுவிப்பு என்பன இன்னமும் கரிசனைக்குரிய பிரச்சினைகளாகக் காணப்படுவதாக சுட்டிக்காட்டினார். 

அத்தோடு கடந்தகால மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பன இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்த அவர், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்று நிறுவப்படும் பட்சத்தில், பாதிக்கப்பட்டோர் உள்ளடங்கலாக சகல தரப்பினரதும் நம்பிக்கையை வென்றெடுப்பதன் ஊடாக மாத்திரமே அது வெற்றிகரமானதொரு பொறிமுறையாக இயங்கமுடியும் எனக் குறிப்பிட்டார்.

 அர்த்தபூர்வமான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்தி, சகல தரப்பினருடனும் கலந்துரையாடி மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டுமென ஜப்பான் பிரதிநிதி வலியுறுத்தினார். 

அதுமாத்திரமன்றி உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உள்ளடங்கலாக நிலைமாறுகால நீதியை உறுதிப்படுத்துவதற்குத் தாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத்தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

 மேலும் நியூஸிலாந்து, ஓமான், எகிப்து, லக்ஸம்பேர்க், ஜேர்மனி, பிரான்ஸ், இஸ்ரேல், துருக்கி, கியூபா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் இலங்கை தொடர்பில் பேரவையில் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது. 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்