ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் இன்று(11) ஆரம்பமாகிறது.
இன்று ஆரம்பிக்கும் 54 ஆவது கூட்டத்தொடர் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை குறித்து நாடுகள் தமது கருத்துக்களை முன்வைக்கும் என்பதுடன், அது தொடர்பான ஊடாடும் கலந்துரையாடல்கள் கூட்டத்தொடரில் இடம்பெறவுள்ளன.
இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் செம்மையாக்கப்படாத அறிக்கை ஏற்கனவே வெளியாகியிருந்ததுடன், அதற்கான பதிலை சிறிலங்கா அரசாங்கம் அனுப்பியுள்ளதாக இராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டல், மதிப்பீடு செய்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கான ஆணை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு இறுதியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் வழங்கப்பட்டது.
இந்த தீர்மானம் கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்டத்தொடரில் மீளவலியுறுத்தப்பட்ட நிலையிலேயே, இன்று ஆரம்பமாகும் 54 ஆவது கூட்டத் தொடரில் இந்த தீர்மானம் சார்ந்த முன்னேற்றங்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் எழுத்துமூல அறிக்கை வெளியிடப்படவுள்ளது.
இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான புதிய தீர்மானங்கள் எவையும் நிறைவேற்றப்படாது என்ற போதிலும், இந்த முறை வெளியிடப்படவுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் எழுத்துமூல அறிக்கை இலங்கைக்கு மேலும் அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனிடையே இலங்கையின் கடந்தகால மற்றும் தற்போதைய மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாக தேசிய ரீதியில் இயங்கிவரும் மனித உரிமைகள் மற்றும் குடிசார் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து விரிவான அறிக்கைகளை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.