கச்சத்தீவு விவகாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசியல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளதாக மியன்மாருக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் பேராசிரியர் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார்.
“இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பாக்கு நீரிணையில் அமைந்துள்ள கச்சத்தீவானது 1.6 கி.மீ நீளத்தையும் 300 சதுர மீற்றர் அகலத்தையும் கொண்டதாகும். அத்துடன், 285 ஏக்கர் பரப்பளவை கொண்ட கச்சத்தீவில் மக்கள் எவரும் வசிக்கவில்லை.
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தென்னிந்திய மக்களின் ஆதரவைப் பெறுவதற்காகவே மோடி இவ்வாறு பேசியுள்ளார்.
கச்சத்தீவில் நடைபெறும் வருடாந்த புனித அந்தோனியார் திருவிழாவில் விசா இல்லாமல் இந்தியர்கள் கலந்துகொள்ளலாம். இந்திய மீனவர்கள் இலங்கையின் கடல்வளத்தை சூறையாடுவதை இங்குள்ள தமிழர்கள் எதிர்க்கிறார்கள்“ என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை கடந்த 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.
இந்த விவாதத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, கச்சத்தீவு பற்றியும் கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்ட விவகாரம் பற்றியும் கடும் தொனியில் பேசியிருந்தார். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் இந்திரா காந்தி பற்றியும் விமர்சித்திருந்தார்.
ராகுல் காந்தியை கடுமையாக தாக்கி பேசிய பிரதமர் மோடி, 1974-ல் கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது இந்திரா காந்தியின் அரசாங்கம்தான் என்றும் கூறினார்.
“கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள ஒரு தீவு. யாரோ அதை வேறு நாட்டுக்குக் கொடுத்தார்கள். இந்திரா காந்தியின் தலைமையில்தான் அது நடந்தது என்றும் சுட்டிக்காட்டினார்.
கச்சத்தீவை மீட்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பலமுறை எனக்கு கடிதங்களை அனுப்பியுள்ளதுடன், கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியதன் மூலம் தமிழக மீனவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் மோடிக்கு கடந்தவாரம் பிரதமர் மோடிக்கு அனுப்பியிருந்த கடிதத்தில் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.