நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை வீடு புகுந்து வெட்டிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்தவர்கள் முனியாண்டி - அம்பிகாபதி தம்பதி.
கூலித் தொழிலாளிகளான இவர்களுக்கு 17 வயதில் சின்னதுரை என்ற மகனும், 14 வயதில் சந்திரா செல்வி என்ற மகளும் உள்ளனர்.
வள்ளியூரில் உள்ள அரசு பள்ளியில் இவர்கள் இருவரும் படித்து வருகின்றனர்.
பள்ளியில் சக மாணவர்களுக்கிடையே ஜாதி ரீதியாக ஏற்பட்ட பிரச்சனையில் சின்னத்துரை ஒரு வாரம் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
பள்ளிக்குச் சென்ற சின்னத்துரையிடம் பள்ளிக்கு வராதது குறித்து ஆசிரியர்கள் விசாரித்தபோது தன்னை சில மாணவர்கள் ஜாதி ரீதியாக கேலி, கிண்டல் செய்வதால் பள்ளிக்கு வர விரும்பவில்லை என சின்னதுரை ஆசிரியர்களிடம் கூறியுள்ளார்.
இதைகேட்ட ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள் அடங்கிய கும்பல் இரவு 10 மணியளவில் சின்னதுரையின் வீட்டிற்குள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்து சின்னதுரையை சரமாரியாக வெட்டியது.
தடுக்க முயன்ற தங்கை சந்திரா செல்வியையும் அவர்கள் வெட்டிவிட்டு தப்பி ஓடினர்.
பலத்த ரத்த காயங்களுடன் கிடந்த இருவரையும் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதல் தொடர்பாக 17 வயதுடைய பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் 4 பேர் மற்றும் 2 சிறார் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக மேலும் ஒரு சிறுவனை காவல்துறையினர் இன்று காலை கைது செய்துள்ளனர்.