day, 00 month 0000

பதினேழு வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட 17 நிவாரணப் பணியாளர்களுக்கு நினைவேந்தல்

திருகோணமலை மாவட்டம் மூதூரில் பதினேழு வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட 17 நிவாரணப் பணியாளர்கள் யாழ்ப்பாணத்தில் நினைவு கூரப்பட்டுள்ளனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகள் கடந்த வார இறுதியில் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பதாகையின் முன் 17 தீபங்களை ஏற்றி அவர்களை நினைவு கூர்ந்ததாக பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரும் இந்த நினைவேந்தலில் பங்கேற்றனர்.

ஓகஸ்ட் 4, 2006 அன்று, பிரான்ஸ் பாரிஸைத் தளமாகக் கொண்ட சர்வதேச அமைப்பான 'Action Against Hunger' (ACF) மூதூர் அலுவலகத்தில் பணிபுரிந்த 17 இலங்கை உதவிப் பணியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

 

அந்த 17 பேரில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த 16 இலங்கையர்களும் முஸ்லிம் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு இலங்கையரும் அடங்குவர். அவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்களாவர்.

மூதூர் பிரதேசத்தை கைப்பற்றும் நோக்கில் இலங்கை அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல் இடம்பெற்ற வேளையில், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக நிவாரணப் பணியாளர்கள் மூதூருக்குச் சென்றிருந்தனர்.

ஓகஸ்ட் 4, 2009 அன்று, மூதூர் படுகொலையின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளில், யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பு வெளியிட்ட விரிவான அறிக்கை, படுகொலைகளுக்கு அரசாங்கப் பாதுகாப்புப் படையினரே காரணம் என்பதை வெளிப்படுத்தியது.

சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட ஏராளமான சாட்சிகள் மற்றும் தொடர்புடைய துப்பாக்கிகளை பகுப்பாய்வு செய்து அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் உட்பட 16 மனித உரிமை மீறல் வழக்குகளுக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் 2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஸ்தாபிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இலங்கை இராணுவம் மற்றும் கடற்படை இந்த சம்பவத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது.

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி நிஷங்க உடலாகம தலைமையிலான இந்த ஆணைக்குழுவில் யசந்த கோதாகொட, துலிப் ஜயதுங்க மற்றும் லக்மாலி கருணாநாயக்க ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.

குறிப்பிட்ட தருணத்தில் ஒரு இராணுவ உறுப்பினரேனும் அருகில் இருந்ததாக எந்த சாட்சியும் கூறவில்லை என நீதிபதி உடலாகம அப்போது ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். சம்பவம் இடம்பெற்ற போது மூதூர் பிரதேசம் முழுமையாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், படுகொலை நடந்த போது, ​​மூதூர் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்ததாக, அப்போதைய அரசாங்கப் பேச்சாளரும், தற்போதைய சுகாதார அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

ஒரு நாள் கழித்து, ‘விடுதலைப் புலிகள்தான் கொலையைச் செய்தார்கள் என்பதற்கான ஆதாரம் அரசிடம் உள்ளது’ என்றார். அதற்கான ஆதாரங்கள் இதுவரை வெளியாகியதாக தெரியவில்லை.

சர்வதேச நிபுணர்களைக் கொண்ட இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு (SLMM), 'பாதுகாப்புப் படையினருக்கு இந்த நடவடிக்கையுடன் எந்தத் தொடர்பும் இல்லை எனக் கூறினாலும், அவர்கள் ஈடுபட்டதற்கான தீவிர அறிகுறிகள் தென்படுகின்றன' என பகிரங்கமாகக் கூறியது.

 

எனினும், ஒட்டுமொத்தமாக, Action Against Hunger என்ற சர்வதேச அமைப்பு இலங்கையில் கவனக்குறைவாக செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு குறிப்பிட்டது.

கொல்லப்பட்ட உதவிப் பணியாளர்களின் உறவினர்களுக்கு அமைப்பு பத்து வருடங்கள் சம்பளம் வழங்க வேண்டும் என ஆணைக்குழு பரிந்துரைத்தது.

ஆனால் இந்த ஆணைக்குழு செயற்படும் போது, ​​சாட்சியமளிக்க முன்வந்த பாதிக்கப்பட்ட 17 பேரின் உறவினர்கள் பாதுகாப்புப் படையினரால் அச்சுறுத்தப்பட்டதாக சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் இலங்கையில் நடத்திய விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை கண்காணிக்க நியமிக்கப்பட்ட சர்வதேச சுதந்திர நிபுணர் குழு (IIGEP) என அழைக்கப்படும் நீதிபதி பி.என்.பகவதி தலைமையிலான இந்தியக் குழு, விசாரணைகளின் பாரபட்சமற்ற தன்மையைக் கேள்விக்குள்ளாக்கி 2008இல் இராஜினாமா செய்தது. குறிப்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் தலையீடு தொடர்பில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.

கொல்லப்பட்ட 17 பேருக்கு நீதி கிடைக்கும் வரை தனது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என Action Against Hunger கூறுகிறது.

எம். நர்மதன் (23) - நீர் மற்றும் சுகாதார தொழில்நுட்ப நிபுணர்

ஆர். அருள்ராஜா (24) - நீர் மற்றும் சுகாதார தொழில்நுட்ப நிபுணர்

எஸ். கோணேஸ்வரன் (24) - சாரதி

எம். ரிஷிகேஷ் ((24) - நீர் மற்றும் சுகாதார தொழில்நுட்ப நிபுணர்

ஆர். சிவப்பிரகாசம் (25) - சுகாதார ஊக்குவிப்பாளர்

ஜி. கவிதா (27) - சுகாதார ஆலோசகர்

டி. பிரதீபன் (27) - நீர் மற்றும் சுகாதார தொழில்நுட்ப நிபுணர்

ஜ.சீலன் (27) - நீர் மற்றும் சுகாதார தொழில்நுட்ப நிபுணர்

கே. கோவர்தனி (27) - சுகாதார ஊக்குவிப்பாளர்

வி. கோகிலவதானி (29) - சுகாதார ஊக்குவிப்பாளர்

வை. கோடீஸ்வரன் (30) - உணவு பாதுகாப்பு தொழில்நுட்ப நிபுணர்

ALM. ஜாஃபர் (31) - நீர் மற்றும் சுகாதார தொழில்நுட்ப நிபுணர்

எஸ்.பி. ஆனந்தராஜா (32) - நிகழ்ச்சி முகாமையாளர்

ஐ. முரளிதரன் (33) - சாரதி

ஜி. ஸ்ரீதரன் (36) - நீர் மற்றும் சுகாதார தொழில்நுட்ப நிபுணர்

எம். கேதீஸ்வரன் (36) - நீர் மற்றும் சுகாதார தொழில்நுட்ப நிபுணர்

எஸ். கணேஷ் (54) - சாரதி


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்