day, 00 month 0000

இலங்கைக்கு முன்னாள் இந்திய அணித் தலைவர் அஸார் பாராட்டு

ஆசிய கிண்ண கிரிக்கெட்டின் பெரும்பாலான போட்டிகளை இங்கு நடத்துவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் எடுத்த துணிச்சலான முடிவு முழு ஆசிய பிராந்திய கிரிக்கெட்டுக்கும் உந்துசக்தியாக அமைந்தள்ளது என முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் மொஹமத் அஸாருதின் பாராட்டினார்.

இந்தியாவினால் உருவாக்கப்பட்ட கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான அஸார் என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் அஸாருதின், தனது முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சதம் குவித்து அசத்தியவர்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் அழைப்பை ஏற்று எல்பிஎல் கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றும் பி லவ் கண்டி அணிக்கு ஆலோசகராக வருகை தந்திருந்த அஸாருதின், ஆர். பிரேமதாச அரங்கில் ஊடகவியலாளர்கள் கூடத்திற்கு வருகை தந்து கருத்து வெளியிட்டபோது ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் செயற்பாடுகளை பாராட்டினார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அஸாருதின்,

'ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை இலங்கையில் நடத்துவதற்கான அனுமதியை ஆசிய கிரிக்கெட் பேரவையிடமிருந்து பெறுவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வாவினால் எடுக்கப்பட்ட முயற்சி அற்புதமானது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி இங்கு நடைபெறவுள்ளமை எல்லாவற்றையும் விட சிறப்பானது. அவரது இந்த முயற்சியானது கிரிக்கெட்டின் மேம்பாட்டிற்கு மட்டுமல்லாமல் முழு ஆசிய பிராந்தியத்திலும் கிரிக்கெட்டை வியாபிக்கச் செய்வதற்கான ஓர் அரிய முயற்சியாக நான் பார்க்கிறேன். இது மிகவும் பாராட்டுக்குரியது' என்றார்.

இலங்கையில் நடத்தப்படும் எல்பிஎல் பற்றி பேசிய அவர்,

'இண்டியன் பிறீமியர் லிக் கிரிக்கெட்டைப் போன்று இலங்கையிலும் லங்கா பிறீமியர் லீக் நடத்தப்படுவது வரவேற்கத்தக்கதாகும். இலங்கையில் எல்பிஎல் நான்காவது தடவையாக நடத்துப்படுகின்றது என்பதை அறிகிறேன். இது உள்ளூர் வீரர்களின் ஆற்றல்களை வெளிக்கொண்டு வர வழிவகுக்கும். மேலும் வெளிநாட்டு வீரர்களுடன் இணைந்து விளையாடும்போது உள்ளூர் வீரர்களுக்கு சிறந்த அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

'அடுத்த சில வருடங்களில் கிரிக்கெட் விளையாட்டில் இலங்கை பெரு முன்னேற்றம் அடையும் என நம்புகிறேன். மேலும் இத்தகைய போட்டிகள் நடத்தப்படுவதன் மூலம் உள்ளூர் வீரர்கள் தங்களது வருவாயையும் அதிகரித்துக்கொள்கின்றனர். அத்துடன் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு நல்ல வருவாய் கிடைக்கும்' என்றார்.

1996 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின்போது அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய இரண்டு அணிகளும் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி இலங்கைக்கு வருகை தர மறுத்தபோது இந்தோ - பாகிஸ்தான் கூட்டு அணி இலங்கைக்கு வருகை தந்து விளையாடி இருந்தது.

அந்த நினைவுகள் பற்றி அஸாருதினிடம் 'வீரகேசரி ஒன்லைன்' கேட்டபோது,

'அது ஓர் அற்புதமான தருணம். இலங்கைக்கு வெளிநாட்டவர்கள் வருகை தர அஞ்சிய வேளையில், இங்கு பாதுகாப்பு உள்ளது என்பதை கிரிக்கெட் உலகிற்கு மட்டமல்ல முழு உலகுக்கும் உணர்த்தவே எமது இரண்டு அணிகளும் (இந்தியா-பாகிஸ்தான்) வருகை தந்து ஆர். பிரேமதாச மைதானத்தில் கூட்டாக விளையாடினோம். அது மறக்க முடியாத தருணம். மேலும் இதே மைதானத்தில் எமக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 900க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்து சாதனை படைத்ததையும் என்னால் மறக்க முடியாது. நான் இலங்கை கிரிக்கெட்டின் இரசிகன். எனவே இலங்கைக்கான எனது விஜயங்களை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்' என பதிலளித்தார்.

துடுப்பாட்டத்திலும் களத்தடுப்பிலும் ஆற்றல் மிக்கவர்

இந்தியாவின் துடுப்பாட்ட நட்சத்திரங்களில் ஒருவரான அஸாருதினின் உச்ச கட்ட ஆற்றல்களை நேரில் கண்டவர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். 1984இல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான அஸாருதின் முதல் 3 டெஸ்ட் போட்டிகளிலும் சதங்கள் குவித்து அசத்தியிருந்தார்.

அவுஸ்திரேலியாவின் முன்னாள் அணித் தலைவர் க்றெக் செப்பல், பாகிஸ்தான் முன்னாள் விரர் ஸஹீர் அபாஸ் ஆகியோரைப் போன்று 'லெக் - சைட்' பக்கமாக அஸாருதின் க்ளான்ஸ் பண்ணுவது மிகவும் அற்புதமாக இருக்கும். காலவட்டத்தில் பெரு முன்னேற்றம் அடைந்த அஸாருதின் நாலாபுறமும் பந்தை அடிக்கக்கூடிய திறமையான வீரராக பிரகாசித்தார்.

அவரது காலத்தில் இந்திய வீரர்கள் களத்தடுப்பில் பெரிய அளவில் திறமைசாலிகளாக இருக்கவில்லை. ஆனால், அஸாருதின் எல்லோரையும் விட அதிசிறந்த களத்தடுப்பாளராக செயற்பட்டு மற்றையவர்களை ஊக்குவித்தார்.

கிரிக்கெட்டின் தாயகமான லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் இங்கலாந்துக்கு எதிராக 1990இல் அவர் குவித்த சதத்தை (121 ஓட்டங்கள்) எல்லாம் வல்ல இறைவனுக்கு சமர்ப்பணம் செய்வதாக குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் தனது முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் சதம் குவித்து அசத்திய அஸாருதின், தொடர்ந்து நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 3 டெஸ்ட்களிலும் பிரகாசிக்கத் தவறினார்.

99 டெஸ்ட் போட்டிகளில் 22 சதங்கள், 21 அரைச் சதங்களுடன் 6215 ஓட்டங்களைக் குவித்த அஸாருதின், 334 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 7 சதங்கள், 58 அரைச் சதங்களுடன் 9378 ஓட்டங்களைப் பெற்றார்.

2000ஆம் ஆண்டில் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து விடைபெற்ற அஸாருதின், 9 வருடங்கள் கழித்து அரசியல் களத்தில் பிரவேசித்தார். காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர் 2009இலிருந்து  2014வரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் 27ஆவது தலைவராக 2019இல் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வருடம் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்