day, 00 month 0000

மீண்டும் சரிந்த இலங்கை ஒட்டுமொத்த நிலையில் 16ஆவது இடம்

தென் ஆபிரிக்காவின் கேப் டவுன் இன்டர்நெஷனல் கொன்வென்ஷன் சென்டர் உள்ளக அரங்கில் நடைபெற்று வரும் 16ஆவது உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் மிக மோசமாக விளையாடிய இலங்கை ஒரே ஒரு வெற்றியுடன்  ஒட்டுமொத்த நிலையில்  16ஆவது  இடத்தைப் பெற்றது.

ஈ குழுவுக்கான முன்னோடி சுற்றில் பார்படோஸை வெற்றிகொண்ட இலங்கை, நிரல்படுத்தலுக்கான கடைசிப் போட்டியில் சிங்கப்பூரிடம் 46 - 49 என்ற கோல்கள் அடிப்படையில் தோல்வி அடைந்து   கடைசி இடத்தைப் பெற்றது.

சிங்கப்பூருக்கு எதிராக வெள்ளிக்கிழமை (04) நடைபெற்ற நிரல்படுத்தலுக்கான போட்டியின் முதலாவது ஆட்ட நேர பகுதியில் மிகத் திறமையாக விளையாடிய இலங்கை 15 - 8 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

ஆனால், இரண்டாவது ஆட்ட நேர பகுதியில் இலங்கை விட்ட ஏகப்பட்ட தவறுகளைப் பயன்படுத்திக் கொண்ட சிங்கப்பூர் அப் பகுதியை 12 - 11 என்ற கோல்கள் கணக்கில் தனக்கு சாதகமாக்கிக்கொண்டது. எனினும் இடைவேளையின்போது இலங்கை 26 - 20 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை வகித்தது.

இடைவேளைக்குப் பின்னர் ஆட்டத்தின் பிடியை சிறுக சிறுக நழுவவிட்ட இலங்கை, 3ஆவது ஆட்ட நேர பகுதியை சிங்கப்பூரிடம் 10 - 16 என்ற கோல்கள் கணக்கில் தாரை வார்த்தது. இதன் காரணமாக மூன்றாவது ஆட்ட நேர பகுதி முடிவில்  கோல்கள்   நிலை 36 - 36 என சமநிலையில் இருந்தது.

கடைசி ஆட்ட நேர பகுதியில் பெரும் அழுத்தத்துக்கு மத்தியில் விளையாடிய இலங்கை 10 கோல்களை மாத்திரம் போட, சிங்கப்பூர் 13 கோல்களைப் போட்டு ஒட்டுமொத்த நிலையில் 49 - 45 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டி 15ஆவது இடத்தைப் பெற்றது.

நான்கு வருடங்களுக்கு முன்னர் சிங்கப்பூரை முன்னோடி சுற்றிலும் நிரல்படுத்தல் போட்டியிலும் வெற்றிகொண்ட இலங்கை, இம்முறை அந்த இரண்டு சுற்றுகளிலும் சிங்கப்பூரிடம் தோல்வி அடைந்தது.

இலங்கை சார்பாக திசலா அல்கம 46 முயற்சிகளில் 43 கோல்களையும் செமினி அல்விஸ் 2 முயற்சிகளில் 2 கோல்களையும் துலங்கி வன்னித்திலக்க ஒரு முயற்சியில் ஒரு கோலையும் போட்டனர்.

சிங்கப்பூர் சார்பாக ஆமன்தீப் சஹால் 43 முயற்சிகளில் 38 கோல்களையும் காய் வெய் டோஹ் 14 முயற்சிகளில் 11 கோல்களையும் போட்டனர்.

இந்த சுற்றுப் போட்டியில் சாதிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கையின் முன்னாள் வலைபந்தாட்ட நட்சத்திரம் தர்ஜினி சிவலிங்கத்திற்கு ஓரிரு போட்டிகளைத் தவிர்ந்த மற்றைய போட்டிகளில் வெறும் பார்வையாளராக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தர்ஜினி சிவலிங்கத்தை அணியில் சேர்க்க வெண்டும் என்பதில் தெரிவாளர்கள், பயிற்றுநர், இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனத்தின் சில அதிகாரிகள் பிடிவாதமாக இருந்தபோதிலும் அவர்களது நோக்கம் நிறைவேறாமல் போனது.

அத்துடன் இந்தப் போட்டியுடன் தர்ஜினி சிவலிங்கம் தனது 20 வருட வலைபந்தாட்ட விளையாட்டிலிருந்து விடைபெற்றார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்