ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வெள்ளையடிக்கும் வேலைகளையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்துவருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,
13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது சம்பந்தமாக இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தைக்காக எமக்கு மீண்டும் அழைப்பு வந்துள்ளது.
இதனை தமிழ் மக்களின் அரசியல் தீர்வு சம்மந்தமான பேச்சுவார்த்தையென சர்வதேச மட்டத்தில் காட்டிக்கொள்ளும் அரசாங்கம், தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு எந்தவித தொடர்பும் இல்லாத ஒற்றையாட்சிக்குள் இருக்கக் கூடிய 13ஆவது திருத்தம் தொடர்பாக பேச அழைத்துள்ளனர்.
இது மீண்டும் மீண்டும் ஈழத் தமிழர்களை முட்டாள்களாக்கும் வேலையாகும். ஈழத்தமிழர்களை ரணில் விக்ரமசிங்க மதிக்கத் தயாரில்லை அல்லது கணக்கெடுக்கத் தயாரில்லை என்பதையே இந்தச் செயல்பாடுகள் காட்டுகின்றன.
குட்டக் குட்ட குனிபவனும் மடையன், குனியக் குனியக் குட்டுபவனும் மடையன் என்பது போல இதைத் தெரிந்துகொண்டு பேச்சுவார்த்தையில் கலந்துகொள்கின்ற தமிழ்த் தரப்புகள் தமிழ் மக்களது பேரம் பேசும் வாய்ப்பை இழந்துவருகின்றனர் என்பதை நாம் உணர்ந்துள்ளோம்.
ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியை சிங்கள மக்களே ஏற்றுக் கொள்ளாத அல்லது அங்கீகரிக்காத சூழலை தமிழ் தலைமைகள் உணர்ந்துக்கொள்ள வேண்டும்.
அதிகாரப் பகிர்வு என 13ஆம் திருத்தம் அமுலப்படுத்துவதாகச் கூறி தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஜனாதிபதி, தீவகம் முழுவதையும் (தீவுப் பகுதிகள்) ஓர் அதிகாரச் சபைக்குள் கொண்டுவந்து தீவகத்தில் இருக்கக் கூடிய அனைத்து நிர்வாக பணிகளையும் கொழும்பில் இருந்து நேரடியாக முன்னெடுக்கின்ற ஒரு சட்ட வடிவமொன்றை தயாரித்து அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கும் பணிகளையும் முன்னெடுத்து வருகிறது.
தீவகத்திற்கான அதிகாரக் கட்டமைப்பு என்பது மகாவலி அதிகார சபை அபிவிருத்தி திட்டத்தையும் விட மிக மோசமான வகையில் தமிழர்களின் தலைவிதியை முற்றிலும் மாற்றியமைக்கக் கூடியது.
அரசாங்கத்தால் மட்டும் நிர்ணயிக்கின்ற ஒரு அதிகார சபையாகத் தான் அந்த உத்தேச வரைபுச் சட்டம் அமைந்திருக்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.