உலகக் கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான திகதிகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அட்டவணையை ஐசிசி சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
இந்த தொடரின் முக்கிய போட்டியாக கருதப்படும் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி, அக்டோபர் 15-ஆம் திகதி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அன்றைய தினம் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுவதால் பாதுகாப்பு வழங்குவதில் பிரச்சினை உள்ளதாக மாநில பொலிஸார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டிகள் ஒரு நாள் முன்னதாக அக்டோபர் 14-ஆம் தேதி நடத்து குறித்கு ஐசிசி மற்றும் பிசிசிஐ ஆலோசனை மேற்கொண்டது.
இதுகுறித்து கடிதம் ஒன்றையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு பிசிசிஐ தரப்பில் அனுப்பப்பட்டது. இந்நிலையில், போட்டியின் திகதியை மாற்ற பிசிசிஐ விடுத்த கோரிக்கையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் அக்டோபர் 14-க்கு மாற்றம் செய்யப்படும் நிலையில், ஹைதராபாத்தில் அக்டோபர் 12-ஆம் திகதி பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதும் போட்டியும் மாற்றப்படவுள்ளது.
இந்த வார இறுதிக்குள் திருத்தப்பட்ட புதிய அட்டவணையை ஐசிசி வெளியிடவுள்ளது.