cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

சமஷ்டி கட்டமைப்பில் அதிகாரப் பகிர்வு இருக்க வேண்டும் என்கிறார் சுமந்திரன்

1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இந்திய - இலங்கை உடன்படிக்கையில் வடக்கு கிழக்கானது தமிழ் பேசும் மக்களின் பூர்வீக வாழ்விடம் என்பது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இதில் மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் உள்ளடங்கலான அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டிருந்தது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும்  ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, அரசியலமைப்பின் 13வது திருத்தம், நீண்டகாலமாக தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தல்கள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாடுகள் ஆகிய விடயங்கள் தொடர்பான எமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனினால் திங்கட்கிழமை 31) அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அநிக்யைிலேயே இவ்வாறு குறிப்பிட்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழ் மக்கள், 1956 ஆம் ஆண்டு முதல், வடக்கு - கிழக்கில் சமஷ்டி ஏற்பாட்டின் மூலம் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை நோக்கிச் செயற்படுவதற்கான ஆணையை, தமிழ் அரசியல் கட்சிகளுக்கு தொடர்ச்சியாக வழங்கியுள்ளனர்.

1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இந்திய-இலங்கை உடன்படிக்கையில் வடக்கு கிழக்கானது தமிழ் பேசும் மக்களின் பூர்வீக வாழ்விடம் என்பது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது, இதில் மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் உள்ளடங்கலான அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டிருந்தது.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளின் விளைவாக இந்தியா வழங்கிய அனுசரணைகளை இலங்கை ஏற்றுக்கொண்டது முதல் கடந்த 40 ஆண்டுகளாக இந்திய அரசாங்கம் இந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

மிக சமீபத்தில் கூட, இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் , இலங்கை அரசு தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றி, சமத்துவம், நீதி மற்றும் சமாதானத்திற்க்கான மறுகட்டமைப்பை முன்னெடுத்துச் செல்லும் என்ற இந்தியாவின் நம்பிக்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்திருந்தார்.

மேலும் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும், இலங்கையின் தமிழ் சமூகத்திற்கு சுயமரியாதை மற்றும் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்யவும் இலங்கை தனது உறுதிமொழியை நிறைவேற்றும் என்றும் அவர் தனது நம்பிக்கையை தெரிவித்திருந்தார். பின்னர், செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் இந்திய வெளியுறவு செயலாளர் பின்வருமாறு கூறியிருந்தார்.

“ஒன்றுபட்ட மற்றும் வளமான இலங்கை எனும் கட்டமைப்பிற்குள் தமிழ் சமூகத்தின் அபிலாஷைகள், நிச்சயமாக சமத்துவம், நீதி மற்றும் சுயமரியாதைக்கான அபிலாஷைகளை நிவர்த்தி செய்யும் அரசியல் தீர்வை இந்தியா தொடர்ந்து எதிர்நோக்குகிறது என்ற உண்மையின் அடிப்படையில் இதைவிட வெளிப்படையாக எதுவும் இருக்க முடியாது.

அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு மற்றும் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துதல் என்பன இலங்கையின் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு தீர்வு காண்பதற்கும், அதனை எளிதாக்குவதற்கும் இன்றியமையாத கூறுகளாகும் என பிரதமர் மேலும் தெளிவாகக் கூறியிருந்தார். இதுவே எங்களின் நிலையான நிலைப்பாடாக இருந்து வருகின்றதோடு, இது இரு தலைவர்களுக்கிடையிலான சந்திப்பின் போதும் முன்வைக்கப்பட்டது.”

1956 முதல் ஒவ்வொரு தேர்தலிலும் வெளிப்படுத்தப்படும் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு இணங்க, சமஷ்டி கட்டமைப்பில் அதிகாரப் பகிர்வு இருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அரசியலமைப்பின் 13 வது திருத்தம் இலங்கையின் அரசியலமைப்பின் ஒரு பகுதியே தவிர, ஒரு தனி இணைப்பு அல்ல.

ஜனாதிபதி மற்றும் நாம் அனைவரும் அதை நிலைநிறுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் சத்தியபிரமாணம் செய்துள்ளோம். இவ்வாறு அரசியலமைப்பின் ஒரு பகுதியை நடைமுறைப்படுத்தாதது விடுவது என்பது அரசியலமைப்பு முழுவதையும் மீறுவதாகவே அமையும். எனவே எமது அரசியலமைப்பில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அதிகாரப்பகிர்வு ஏற்பாட்டை முழுமையாக அமுல்படுத்துமாறு நாம் வலியுறுத்துகின்றோம்.

எனினும் அது தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகளை பூர்த்தி செய்யாது. அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டை பல்வேறு செயல்முறைகள் மூலம் அர்த்தமுள்ளதாக்க வேண்டும் என்பது,மங்கள முனசிங்க தெரிவுக்குழுவில் இருந்து 2016 – 2019 வரை அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் இடம்பெற்ற அரசியலமைப்பு பேரவை வரை, மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக்காலத்தின் போது இந்தியாவுடன் குறைந்தபட்சம் மூன்று தனித்தனி கூட்டு அறிக்கைகள் மூலம் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முறைமையை மாற்றியமைக்கும் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள சட்ட காலதாமதங்கள் காரணமாக குறைபாடுகளுடன் இயங்கி வந்த ஒன்பது மாகாண சபைகள் செயலிழந்துள்ளன.

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான தேர்தல் சீர்திருத்தத் தெரிவுக்குழு கடந்த வருடம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், மூன்று வருடங்களுக்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல் மக்களின் ஜனநாயக உரிமையை மறுப்பதாக இனங்கண்டு முன்பு இருந்த விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும் என பரிந்துரை செய்ததோடு இதை செயல்படுத்த தகுந்த சட்டம் இயற்ற வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.

இந்த பரிந்துரைகளுக்கு இணங்க நான் ஒரு தனி நபர் சட்டமூலம் ஒன்றினை தயாரித்து முன்வைத்திருந்தேன், அதன் முதல் வாசிப்பு முடிந்த நிலையில் இந்த சட்டமூலம் உச்ச நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் இதில் உள்ள சில சரத்துகளில் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களைச் செய்தால், அதனை பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை மூலம் சட்டமாக்க முடியும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

2022 டிசம்பர் 10 ஆம் திகதி இடம்பெற்ற முதலாவது சர்வகட்சி மாநாட்டிலேயே மாகாண சபைத் தேர்தலை இனியும் தாமதிக்காமல் நடத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெளிவாக ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தது. அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்.

ஜனாதிபதியுடன் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன், 2023 ஜனவரி 26ஆம் திகதி நடைபெற்ற இரண்டாவது சர்வகட்சி மாநாட்டில் மீண்டும் எமது நிலைப்பாட்டை வலியுறுத்தினோம். கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் திகதி நடைபெற்ற சர்வ கட்சி மாநாட்டிலும் இதே நிலைப்பாட்டையே தெரிவித்தோம்.

இவ்விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை அவ்வாறே உடனடியாக மாகாண சபைத் தேர்தல்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட மற்றும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்கு அழைப்பு விடுப்பதற்கும் இடையில் எந்த முரண்பாடும் இல்லை. மேலும் கூறுவதானால் ஒன்று இல்லாது மற்றொன்றில் எவ்வித அர்த்தமும் இல்லை.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்