day, 00 month 0000

ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து தமிழ் கட்சிகள் அதிருப்தி : கஜேந்திரகுமார் புறக்கணிப்பு

இந்தியாவுக்குச் செல்லமுன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ்க் கட்சிகளுடன் விசேட சந்திப்பொன்றை நடத்தவுள்ளார்.

இந்தச் சந்திப்பு நாளை செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணிக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 21ஆம் திகதி மூன்றுநாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவுக்குச் செல்லவுள்ள நிலையில், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்கான அழுத்தத்தை பிரதமர் மோடி அவருக்கு கொடுக்க வேண்டுமென வடக்கின் தமிழ் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

தமிழ் மக்கள் கூட்டணி தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பிரதமர் மோடிக்கு விசேட கடிதங்களை அனுப்பியுள்ளன.

குறித்த கடிதங்களில் தமிழ் மக்களுக்கு “சமஷ்டி“ அடிப்படையிலான தீர்வை வழங்கவும் “13ஆவது திருத்தச்சட்டத்தை“ முழுமையாக நடைமுறைப்படுத்தவும் இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான பின்புலத்திலேயே நாளைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் கட்சிகளுடனான விசேட சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

என்றாலும், இந்த சந்திப்பில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கலந்துகொள்ளப்போவதில்லையென அறிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப்., டெலோ, புளொட் ஆகிய கட்சிகள் கலந்துகொள்ளவுள்ளன.

இந்த சந்திப்புக்குறித்து புளொட் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்தனிடம் வினவிய போது,

“பிரதமர் மோடிக்கு ஏற்கனவே நாங்கள் கடிதமொன்றை அனுப்பியுள்ளோம். அதில் ஆரம்பகட்டமாக 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளோம்.

ஜனாதிபதியுடனான சந்திப்பில் நிச்சயம் நாம் கலந்துகொள்வதுடன், இதன்போது எமது நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தவுள்ளோம்” என்றார்.

இந்தச் சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்,

“இவ்வாண்டு பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னர் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாணப்படுமென ஜனாதிபதி கடந்த ஆண்டு அறிவித்திருந்தார்.

ஆனால், பல தடவைகள் அதற்கு இணக்கமாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தாலும் எந்தவிதமான தீர்வும் கிடைக்கவில்லை என்பதுடன் முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இறுதியாக ஜனாதிபதியுடன் நடைபெற்ற கூட்டத்தில் விரைவாக இந்த விடயத்தில் தீர்வுகள் எடுக்கப்படாவிடின் நாம் தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளோமென எச்சரித்ததுடன், ஜுலை மாத இறுதிக்குள் இணக்கப்பாடுகள் எட்டப்பட வேண்டுமெனவும் கூறியிருந்தோம்.

இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாதென எமக்கு தெரிகிறது. காரணம் அதற்கான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. ஜனாதிபதியுடனான சந்திப்பில் நாம் கலந்துகொள்வோம். இந்த சந்திப்பில் முடிவுகளை இந்திய பிரதமருக்கும் அனுப்புவோம்” என்றார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்