day, 00 month 0000

சமஷ்டி முறையிலான தீர்வை வழங்க ரணிலுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய பிரதமரை சந்திக்கும் தருணத்தில் 13 ஆவது திருத்தச்சட்டத்திற்கு பதிலாக சமஷ்டி முறையிலான தீர்வை வலியுறுத்த வேண்டுமென அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளதுடன், அதன் நகலை யாழில் உள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகரிடம் கையளித்துள்ளார்.

இந்திய பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளதாவது,

பிரிட்டிஷ் காலணித்துவ ஆதிக்கத்தில் இருந்து இலங்கை விடுபட்டதன் பின்னர் மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் இலங்கை இருக்கின்றது.

இந்தத் தருணத்திலே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய பயணம் அமைந்திருக்கிறது.

பிரித்தானிய காலணித்துவ ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் அடைந்து ஒரு புதிய தொடக்கத்தை ஆரம்பித்தது போல தற்போதைய சூழ்நிலையிலும் ஒரு புதிய தொடக்கம் இலங்கைக்கு தேவைப்படுகிறது.

இலங்கை பொருளாதார ரீதியாக மட்டுமின்றி அரசியல் ரீதியாகவும் வங்குரோத்து நிலையை அடைந்திருக்கிறது.

கடந்த 75 வருடங்களாக இலங்கை கடைபிடித்துவரும் கொள்கைகள், குறிப்பாக இன்னமும் தீர்க்கப்படாமல் நீண்டு செல்லும் இனப்பிரச்சினையே, இலங்கையின் இன்றைய இந்த வங்குரோத்து நிலைக்கு காரணமாக அமைந்திருக்கிறது.

எனவே, இந்நாட்டின் எதிர்காலம் உண்மையாகவே சிறப்பானதாக இருக்க வேண்டுமெனில், இந்த நாட்டின் கொள்கைகளிலும் ஒரு உண்மையான தீர்க்கமான மாற்றம் தேவைப்படுகின்றது என்பது வெளிப்படையானது.

சிறிது காலத்துக்கு முன்னர் இலங்கையில் நடந்த மக்கள் போராட்டத்தின் போதுகூட, ஒரு ‘கட்டமைப்பு மாற்றம்” தேவை என்ற கோரிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கபட்டிருந்தது. எனினும் யதார்த்தத்தில் அது நடைமுறைச்சாத்தியமற்ற விடயம் என்பதை அந்த மக்கள் எழுச்சி மறந்திருந்தது.

இலங்கையில் நிலவும் இனப்பிரசினைக்கான அடிப்படை காரணிகளில் ஒன்று, இலங்கையிலிருக்கும் 'ஒற்றையாட்சி' அரச கட்டமைப்பு முறைமையாகும்.

இதன் அடிப்படையிலேயே, இலங்கை அரசியலமைப்பில் 13ம் திருத்தச் சட்டமும் கொண்டுவரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அரச கட்டமைப்பு ஒற்றையாட்சி அரசமைப்பாக இருக்கும் வரையிலும், எந்தவொரு வழிமுறையும் அர்த்தமுள்ள சுயாட்சியை அனுபவிக்கவோ அல்லது சுயநிர்ணய உரிமையை உரியமுறையில் பிரயோகிக்கவோ முடியாதவாறு இருப்பதனால், அந்த ஒற்றையாட்சி முறைமைக்கு உட்பட்ட 13ம் திருத்தச்சட்டம் அறிமுகப்படுப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே தமிழர் தரப்பு முழுமையாக அதனை நிராகரித்து வந்துள்ளது.

குறிப்பாக, 13ம் திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டு 36 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அரசியல் ரீதியாக, அன்றைய காலத்துடன் ஒப்பிடுகையில் களச்சூழல் மேலும் மேலும் மோசமாகியே உள்ளது.

இந்த 13ம் திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து, அதன் அதிகாரங்கள் குறித்து இலங்கையின் நீதிமன்றுகளில் ஏறத்தாழ 30 வழக்குகள் நிகழ்த்தப்பட்டு அதன் தீர்ப்புகள் அனைத்தும், அரச கட்டமைப்பு ஒற்றையாட்சியாக இருக்கும் வரைக்கும், அனைத்து அதிகாரங்களும், கொழும்பை மையப்படுத்திய மத்திய அரசிடமே இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. அதிகார பகிர்வுக்கு எதிராகவே நீதிமன்றங்கள் தீர்ப்புகளை அளித்திருக்கிறன.

இந்நிலையிலேயே, தமிழர் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக, 13ம் திருத்தசட்டத்தின் முழுமையான அமுலாக்கத்தை இந்தியா கோரி வருகின்றது.

ஆனால், 13ம் திருத்தத்தின் சரத்துகளின் அமுலாக்கம் குறித்து எப்போதெல்லாம் இலங்கையின் மீயுயர் நீதிமன்றை நாடிய போதெல்லாம், அது மேற்குறிப்பிட்டவாறே தீர்ப்புகளை அளித்திருக்கிறது.

அரசியலமைப்பு குறித்தான இறுதி முடிவுகளை எடுக்கும் இடமாக இலங்கையின் உச்ச நீதிமன்று இருக்கின்ற நிலையிலும், அந்த உச்ச நீதிமன்று 13ம் திருத்த அதிகாரங்கள் குறித்து இதுவரைகாலமும் வழங்கிய தீர்ப்புக்களின் அடிப்படையில் 13ம் திருத்தமானது சட்டவரம்புகளின் பிரகாரம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டே உள்ளது.

அதேவேளை, ஒற்றயாட்சிக்குட்பட்ட 13ஐ இனப்பிரச்சினைக்கான தீர்வின் ஆரம்ப புள்ளியாக கருதுவதானது தமிழர்கள், வரலாற்றில் முதன்முறையாக ஒற்றையாட்சிமுறைமையை ஏற்றுகொள்வதாக பதிவாகக் கூடிய ஆபத்தை தரக்கூடியது.

இதன் மூலம் தமிழர்கள் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டமையால் இங்கு ‘இனப்பிரச்சினை என்பது இனி இல்லை’ என சட்டரீதியான நிலைப்பாட்டை இலங்கை எடுக்ககூடிய மிக ஆபத்தான நிலமைக்கே இது வழிவகை செய்துவிடும்.

இந்த காரணிகளின் அடிப்படையிலே எமது அமைப்பானது 13ஐ தீர்வுக்கான ஆரம்ப புள்ளியாகவேனும் கருத்திலெடுக்க கூடாதெனும் நிலைப்பாட்டினை ஆரம்பம் முதல் எடுத்துவருகின்றது,

அத்தோடு, இனப்பிரச்சினைத் தீர்வுக்குரிய எந்தவொரு பேச்சுவார்த்தையும், நேர்மையானதாகவும் தீர்க்கமானதாகவும் இருக்கவேண்டுமெனில் அரசியலமைப்பு மூலம், நாட்டின் ஐக்கியத்தை பேணிக்கொள்ளும் அதேவேளை, ஒற்றையாட்சியைக் கடந்து சமஷ்டி முறையை கருத்தில் எடுப்பதன் மூலமே இனப்பிரச்சினைக்கான தீர்வை அடைய முடியும் என்பதை சிங்கள தேசத்தின் தலைவர்கள், தமது மக்களுக்கு நேர்மையாகவும் வெளிப்படையாகவும் சொல்லவேண்டும் என்பதையும் எமது அமைப்பு வலியுறுத்தி நிற்கின்றது.

1985ஆம் ஆண்டு இலங்கை அரசுக்கும் தமிழர் தரப்புக்கும் இந்தியாவின் ஆசீர்வாதத்தோடும் அனுசரணையோடும் நடந்த பேச்சுக்களில் தமிழர் தரப்பில் அனைவரும் இணைந்து ஒருமித்த குரலில் முன்வைத்த திம்புக்கோட்பாடுகள் தீர்வுக்கான அடிப்படைகளாக இருக்க வேண்டுமென எமது அமைப்பு மிக திடமாக நம்புகிறது.

இதனடிப்படையிலேயே, கோத்தபாய ராஜபக்சவின் பதவிக்காலத்தில் அவரால் உருவாக்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையிலான நிபுணர் குழுவிற்கு இனப்பிரச்சினைத் தீர்வு குறித்தான எமது பிரேரிப்புகளை முன்வைக்குமாறு கோரப்பட்ட போது, எமது அமைப்பானது திம்பு கோட்பாடுகளின் அடிப்படையிலான தீர்வு யோசனை ஒன்றை சமர்ப்பித்திருந்ததோடு அதன் பிரதியொன்றை இந்திய தூதுவராலயத்துக்கும் வழங்கி இருந்தது.

எம்மால் சமர்ப்பிக்கப்பட்ட அந்த தீர்வு நகலானது இலங்கைத்தீவில் இருக்கும் சிங்கள தேசம் மற்றும் தமிழர் தேசம் என்பவற்றின் தனித்துவ இறைமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் ஐக்கியப்பட்ட நாட்டில் 'சமஷ்டி' அடிப்படையிலான தீர்வை வலியுறுத்தி இருந்தது.

அத்தோடு , வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் அபிலாசைகளும் மலையத் தழிழர்களின் அபிலாசைகளும் அதில் உள்ளக்கப்படவேண்டும் என்பதையும் எமது சமர்ப்பணம் வெளிப்படுத்தி இருந்தது.

பொருளாதாரம் பாதாளத்தில் வீழ்ந்துள்ள இலங்கை, தனக்குரிய தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்ய உலக நாடுகளில் தங்கியுள்ள நிலையில், வேறெந்த நாடுகளை விடவும் இந்தியாவிற்கு இலங்கை மீதான பிடி மிகவும் வலிதானது.

இக்கட்டான நிலையில் இருந்து இலங்கையை மீட்பதற்காக தனது நடவடிக்கைகள் மூலம் சிங்கள மக்களின் மரியாதையும் இந்தியா வென்றிருக்கின்ற நிலையை உருவாக்கியிருக்கிறது.

இந்நிலையில், ஒற்றையாட்சிக்குட்பட்ட எந்தவொரு தீர்வையும் தமிழர்கள் நிராகரிப்பதை இந்தியா ஏற்று, தமிழரின் அந்த நிலைப்பாட்டுக்கு உறுதுணையாக நிற்பதோடு, தமிழர்தேசத்தை அங்கீகரித்து அதை பாதுகாக்கின்ற வகையிலானதும், தமிழர்கள் ஒருபோதும் இழக்கமுடியாத தங்களது சுயநிர்ணய உரிமையை, அனுபவிக்க கூடியதுமான ஒரு சமஷ்டி தீர்வுக்கான தன் ஆதரவை வெளிப்படுத்தவேண்டும் எனவும் எமது அமைப்பு இந்தியாவை தீர்க்கமாக வேண்டிக்கொள்கிறது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்