day, 00 month 0000

யாழ். குடும்பஸ்தருக்கு நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய மரண தண்டனை

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் பெருந்தொகை ஹெரோயின் போதைப் பொருளை கொண்டுச் சென்ற குடும்பஸ்தர் ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

யாழ். நாவற்குழியை சேர்ந்த கந்தையா தியாகராஜா என்ற 55 வயது குடும்பஸ்தருக்கே ஆறு ஆண்டுகளின் பின் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்பதாம் திகதி இரவு 8.30 மணியளவில் வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற பேருந்தை பொலிஸார் சோதனையிட்டனர்.

இதன்போது தனது உடமையில் வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ 135 கிராம் தூய்மையான ஹெரோயின் போதைப் பொருளை பொலிஸார் மீட்டதுடன், குடும்பஸ்தரையும் கைது செய்திருந்தனர்.

மீட்கப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் ஒரு கிலோ 135 கிராம் நிறை உடையது என்பதுடன், கலப்படம் அற்ற தூய ஹெரோயின் என்பதும் பொலிஸ் விசாரணை மற்றும் சோதனைகளில் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், சந்தேகநபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிந்தார்.

சட்டமா அதிபர் திணைக்களத்தால் வவுனியா மேல்நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டு, அரச சட்டத்தரணிகளான தர்சிகா திருக்குமாரன் மற்றும் ஆறுமுகம் தனுஜன் ஆகியோரின் நெறிப்படுத்தலில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.

வழக்கு விசாரணையின் போது, ஹெரோயினை உடமையில் வைத்திருந்தமை மற்றும் விற்பனைக்காக எடுத்து சென்றமை என்பன எந்தவித சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையிலேயே, வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரண தண்டனை வழங்கி இன்று தீர்ப்பளித்தார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்