இந்தியா அனுமதி அளிக்கும் பட்சத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் படகுகளைக் கூட இலங்கை துறைமுகத்திற்குள் அனுமதிப்பேன் என சிறிலங்கா துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான படகு சேவை தாமதமடைவதற்கு இந்திய தரப்பே காரணம் எனவும் கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர், “இந்தியாவிடமே பிரச்சினை உள்ளது. படகு சேவையை ஆரம்பிக்க எந்த தருணத்திலும் நாம் தயாராக இருக்கின்றோம்.
2011 ஆம் ஆண்டு கூட்டுக் குழு தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டது. அந்தக் கூட்டுக் குழுவே பொறிமுறை தொடர்பாக தீர்மானிக்க வேண்டும். அதில் பிரச்சினையில்லை. படகு சேவையை நடத்தவே நாமும் விரும்புகின்றோம். காங்கேசன்துறையில் பயணிகள் துறைமுக முனையத்தை அமைத்துள்ளோம். எனினும் காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்த வேண்டும். அதற்கு 45 மில்லியன் டொலர் நிதி உதவியை இந்தியா வழங்கியுள்ளது.
இது தொடர்பாக அவர்களே ஆலோசனைக் குழுவொன்றையும் நியமித்துள்ளனர். ஏனைய அபிவிருத்திகளை அவர்கள் செய்தாலும் பயணிகள் முனையத்தை எமது செலவிலேயே செய்ய வேண்டும்.
இறுதியாக இந்தியாவுடன் மேற்கொண்டுள்ள தொடர்புகள் மூலம், நாகபட்டிணத்தில் இருந்து மாத்திரம் படகு சேவையை முன்னெடுக்க முடியும் என சமிக்ஞை வெளியிடப்பட்டுள்ளது. வேறு எந்தவொரு துறைமுகத்தில் இருந்தும் படகு சேவையை முன்னெடுப்பது தொடர்பாக அவர்கள் எதனையும் கூறவில்லை.
ஆகவே நாகபட்டிணத்தில் இருந்து மாத்திரமே படகு சேவையை ஆரம்பிக்க முடியும். இந்தியாவுடனான பாதுகாப்பு உள்ளிட்ட மதிப்பீடுகளின் பிரகாரம், இந்தியா அங்கீகாரம் அளித்தால் நாம் எதனையும் ஏற்றுக்கொள்வோம்.
இந்தியா அதிகாரிகளை தொடர்புகொண்டு, நம்பகத்தன்மை, உண்மைத்தன்மையை நிரூபித்து, நாகபட்டிணத்தில் இருந்து படகு சேவையை ஆரம்பிப்பதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்திய அரசாங்கம் அனுமதி அளித்தால், எந்தவொரு படகு சேவையையும் முன்னெடுக்க முடியும்.
தமிழீழ விடுதலை புலிகளின் படகு வந்தாலும் அதனை நான் ஏற்றுக்கொள்வேன். இந்தியா அதற்கு அனுமதி அளிக்க வேண்டும். அதுவே தற்போதைய நிலைமை.
அண்மையில் இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த போது, இந்தப் படகு சேவையை முன்னெடுக்க 10 வரையான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார். அவர்களிடம் சில தெரிவு பொறிமுறைகள் உள்ளன. அனைவருக்கும் அனுமதி வழங்கினாலும் எமக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. அது போட்டித்தன்மையை உருவாக்கும்.
படகு சேவைகளை பயன்படுத்தும் மக்களுக்கும் நன்மை அளிக்கும் ஒன்றாக இருக்கும். குறைந்த செலவில் படகு சேவைகளை மக்கள் பெற்றுக்கொள்ளவும் முடியும்.
மற்றுமொரு பிரச்சினை நிலம். எம்மால் மூன்று ஏக்கர் காணியை வழங்க முடியும். இந்தியாவினால் தெரிவுசேய்யப்படும் படகு சேவை தரப்பினருக்கு அந்தக் காணியை வழங்க வேண்டும்” - என்றார்.