குருந்தூர் மலையில் இருந்து எம்மை வெளியேற்றிய முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. தொல்பொருள் தொடர்பில் ஆராயும் அதிகாரம் அவருக்கு இல்லை.
அத்துடன் இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை நீதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிராக நீதிபதிகளும் செயற்படுகிறார்கள்.
ஆகவே பௌத்த மரபுரிமைகளை பாதுகாக்க சிங்கள மக்கள் ஒன்றிணைய வேண்டும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (7) இடம்பெற்ற வானூர்திமூலம் ஏற்றிச் செல்லல் (திருத்தச்) சட்டமூலம் -இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
தேசிய நல்லிணக்கத்துக்கும்,தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயற்பாடுகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.
இலங்கை சிங்கள பௌத்த நாடு.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 2000 வருடகால பழமையான தொல்பொருள் மரபுரிமைகள் பரவலாக காணப்படுகின்றன.குருந்தூர் மலையில் பௌத்த மரபுரிமைகள் உள்ளன.
குருந்தூர் மலைக்கு நாங்கள் அண்மையில் சென்றிருந்த போது அவ்விடத்துக்கு வருகை தந்திருந்த முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி நாங்கள் விசாரணைக்கு இடையூறு விளைவிப்பதாக குறிப்பிட்டு எம்மை வெளியேறுமாறு குறிப்பிட்டார்.
அத்துடன் குருந்தூர் விகாரையில் வழிபாட்டில் ஈடுபட வருகை தந்த பௌத்த தேரரையும் வெளியேறுமாறு குறிப்பிட்டார். நீதிபதியின் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது.
குருந்தூர் மலை விகாரையின் தொல்பொருள் மரபுரிமை தொடர்பில் கேள்வி எழுப்பும் அதிகாரம் இந்த தமிழ் நீதிபதிக்கு கிடையாது. அத்துடன் குருந்தூர் மலையில் இருந்து வெளியேறுமாறு குறிப்பிடும் அதிகாரமும் அவருக்கு இல்லை. இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை தமிழ் நீதிபதி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் திட்டமிட்ட வகையில் பௌத்த மரபுரிமைகள் அழிக்கப்படுகின்றன. அதற்கு ஒருசில நீதிபதிகளும் ஆதரவு வழங்குகிறார்கள்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி அரசியலமைப்பின் 9 ஆவது அத்தியாயத்தை முழுமையாக மீறியுள்ளார் என்பதையும் உயரிய சபை ஊடாக குறிப்பிட்டுக் கொள்கிறேன்.
பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளை அழித்து அதன் மீது திரிசூலம் உட்பட மத அடையாளங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.குருந்தூர் மலையிலும் இவ்வாறான தன்மையே காணப்படுகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்க சிங்கள பௌத்த மக்கள் ஒன்றிணைய வேண்டும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள் என்று குறிப்பிடப்படுகிறது.தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள் என்றால் ஏன் பௌத்த மத மரபுரிமைகளை அழித்து அதன் மீது திரிசூலத்தை அமைக்க வேண்டும்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.