day, 00 month 0000

இங்கிலாந்துடனான ஆஷஸ் டெஸ்டில் அவுஸ்திரேலியாவுக்கு பரபரப்பான வெற்றி

பேர்மிங்ஹாம், எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் நடைபெற்ற மிகவும் பரபரப்பான ஏஷஸ் மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்தை 2 விக்கெட்களால் அவுஸ்திரேலியா வெற்றிகொண்டது.

இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் அவுஸ்திரேலியா முன்னிலை அடைந்ததுடன் 2023 - 2025 ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான முதலாவது வெற்றிப் புள்ளிகளையும் பெற்றுக்கொண்டது.

போட்டியின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை (20) காலை பெய்த மழை காரணமாக முதலாவது ஆட்ட நேர பகுதி கைவிடப்பட்டது.

பகல்போசன இடைவேளைக்குப் பின்னர் அவுஸ்திரேலியா தனது 2ஆவது இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 103 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்தது.

மொத்த எண்ணிக்கை 121 ஓட்டங்களாக இருந்தபோது இராக்காப்பாளன் ஸ்கொட் போலண்டும் மொத்த எண்ணிக்கை 143 ஓட்டங்களாக இருந்தபோது ட்ரவிஸ் ஹெட்டும ஆட்டம் இழந்தனர்.

தேநீர் இடைவேளையின்போது 5 விக்கெட்களை இழந்து 185 ஓட்டங்களைப் பெற்றிருந்த அவுஸ்திரேலியா சற்று பலம்வாய்ந்த நிலையில் இருந்தது. கவாஜா 56 ஓட்டங்களுடனும் கெமரன் க்றீன் 22 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இதன் காரணமாக அவுஸ்திரேலியா  இலகுவான வெற்றியை ஈட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

அவர்கள் இருவரும் 6ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது கெமரன் க்றீன் ஆட்டம் இழந்தார். (192 - 6 விக்.)

மறுபக்கத்தில் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த உஸ்மான் கவாஜா, பென் ஸ்டோக்ஸின் பந்துவீச்சில் இன்சைட் எஜ் மூலம் போல்ட் ஆனார். (209 - 7 விக்.)

எட்டாவதாக அலெக்ஸ் கேரி ஆட்டம் இழந்தபோது அவுஸ்திரேலியா 227 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.

இந் நிலையில் பெட் கமின்ஸ், நெதன் லயன் ஆகிய இருவரும் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 9ஆவது விக்கெட்டில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு பரபரப்பான 2 விக்கெட் வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர்.

எண்ணிக்கை சுருக்கம்

இங்கிலாந்து 1ஆவது இன்: 393 - 8 விக். டிக்ளயார்ட் (ஜோ ரூட் 118 ஆ.இ., ஜொனி பெயாஸ்டோவ் 78, ஸக் க்ரோவ்லி 61, நெதன் லயன் 149 - 4 விக், ஜொஷ் ஹேஸ்ல்வூட் 61 - 2 விக்.)

அவுஸ்திரேலியா 1ஆவது இன்: 386 (உஸ்மான் கவாஜா 141, அலெக்ஸ் கேரி 66, ட்ரவிஸ் ஹெட் 50, கெமரன் க்றீன் 38, பெட் கமின்ஸ் 38, ஒல்லி ரொபின்சன் 55 - 3 விக்., ஸ்டுவர்ட் ப்றோட் 68 - 3 விக்.)

இங்கிலாந்து 2ஆவது இன்: 273 (ஜோ ரூட் 46, ஹெரி ப்றூக 46, பென் ஸ்டோக்ஸ் 43, ஒல்லி ரொபின்சன் 27, பெட் கமின்ஸ் 63 - 4 விக்., நெதன் லயன் 80 - 4 விக்.)

அவுஸ்திரேலியா 2ஆவது இன்: (வெற்றி இலக்கு 281 ஓட்டங்கள்) 282 - 8 விக். (உஸ்மான் கவாஜா 65, பெட் கமின்ஸ் 44 ஆ.இ., டேவிட் வோர்னர் 36, கெமரன் க்றீன் 28, ஸ்கொட் போலண்ட் 28, அலெக்ஸ் கேரி 20, நெதன் லயன் 16 ஆ.இ., ஸ்டுவர்ட் ப்றோட் 64 - 3 விக்., ஒல்லி ரொபின்சன் 43 - 2 விக்.)


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்