day, 00 month 0000

இந்தியாவில் தங்கம் கடத்தல் அதிகரிப்பு - காரணம் என்ன?

ஒவ்வொரு முறை தங்கம் இறக்குமதி அதிகரிக்கும்போதும் தங்கம் கடத்தலும் அதிகரிக்கிறது  இந்தியா தங்கக் கடத்தல் மையமாக உருமாறி வருவதாக  உலக தங்க கவுன்சிலை மேற்கோள்காட்டிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனைய நாடுகளை விட இந்தியாவின் தங்க தேவை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. உலக அளவில், தங்கத்திற்கான தேவை இந்தியாவில் 20 சதவீதமாக உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இப்போதைய நிலவரப்படி, அங்கு ஒரு ஆண்டில் 800 தொன் தங்கம் பயன்படுத்தப்படுகிறது.

உள்நாட்டில் கிடைக்கும் தங்கத்தின் அளவு போதுமானதாக இன்மையால், வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை இறக்குமதி செய்வது ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.

கடந்த 2019 - 2020ஆம் ஆண்டு நிலவரப்படி, 1.99 லட்சம் கோடி ரூபாய் (இந்திய) மதிப்பிலான தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. அதுவே, 2021 - 2022இல் 3.44 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது.

இந்தியாவில் உள்ள தங்கத்தில், 33 சதவீதம் கடத்தல் தங்கம் என, உலக தங்க கவுன்சில் தெரிவிக்கிறது.

குறிப்பாக விமானம் வாயிலாகவே இந்த தங்க கடத்தல் நடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னை, மதுரை, திருச்சி, கோவை பெங்களூரு, கோழிக்கோடு, கொச்சி, திருவனந்தபுரம், பெங்களூரு, புதுடில்லி, ஹைதராபாத், புனே உட்பட நாட்டின் பெரும்பாலான பெருநகரங்களில் உள்ள விமான நிலையங்கள் வாயிலாக இந்த கடத்தல் நடந்து வருவதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவிக்கிறது.

மேற்கு ஆசிய நாடுகள் வழியாகவே இந்தியாவிற்குள் தங்கம் கடத்தி வரப்படுகிறது.

சுங்கத்துறையின் கடுமையான நடவடிக்கை காரணமாக, கடத்தல்காரர்கள் தங்கள் வழித்தடத்தை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது, சீனா, மியான்மர் வழியாக தங்கத்தை கடத்த தொடங்கியுள்ளனர். வடகிழக்கு மாநிலங்கள், மியான்மர், வங்க தேசம், பூட்டான், நேபாளம், சீனா என, ஐந்து நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன.

எனவே, இந்த வழியாக தங்கத்தை இந்தியாவிற்குள் கடத்தி வருவது தற்போது அதிகரித்து வருகிறது.

வெளிநாடுகளில் இருந்து 1 கிலோ தங்கம் கடத்தி வருபவர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் வெகுமதி அளிக்கப்படுகிறது.

தற்போது ஆண்டுக்கு 380 தொன் தங்கம் கடத்தி வரப்படுவதாக, இத்துறையைச் சேர்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் வளைகுடா நாடுகளில், 'பிளம்பர், மெக்கானிக், காவலாளி' உள்ளிட்ட பணிகளில் வேலை பார்க்கும் இந்தியர்களை வைத்தே இந்த தங்க கடத்தல் அரங்கேற்றப்படுகின்றன.

இந்தியா வந்து செல்ல அவர்களுக்கு இலவசமாக விமானச்சீட்டு வழங்குவதுடன், அவர்கள் தரும் பொருளை எடுத்துச் சென்று சேர்ப்பித்தால், 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பணமும் அளிக்கப்படுகின்றன.

இப்படி எடுத்து வரப்படும் தங்கம், கட்டிகள், 'பேஸ்ட்' ஆபரணம், கைக்கடிகாரம், 'கப்ஸ்யூல்' வடிவங்களில் எடுத்து வரப்படுகின்றன.

தொழிற்சாலை உதிரி பாகங்கள், கதவு கைப்பிடிகள், 'வால்வு'கள், 'வாஷர்'கள் உள்ளிட்ட பொருட்களின் வடிவிலும் எடுத்து வரப்படுகின்றன.

இங்கு வந்து சேர்ந்த பின் அவை தங்கக் கட்டிகளாக மாற்றப்பட்டு சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.

இதை எடுத்து வரும் நபர்களிடம் அவற்றை எங்கு ஒப்படைக்க வேண்டும் என்ற தகவல் தெரிவிக்கப்படுவதில்லை. இந்தியா சென்று சேர்ந்ததும் ஒரு குறிப்பிட்ட, 'தொலைபேசி' எண்ணை அழைத்து தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

அந்த எண்ணை அழைத்து சொன்னதும், சம்பந்தப்பட்ட நபர் வந்து பொருளை வாங்கிச் செல்வார்

ஒருவேளை, கடத்தி வந்தவர் விமான நிலையத்தில் மாட்டிக் கொண்டால், அவர் தொடர்பு கொள்ள இருந்த, 'சிம் கார்ட்' உடனடியாக அழிக்கப்பட்டு விடும்.இதனால், கடத்தல் கும்பலை கண்டறிவது முடியாமல் போகிறது.

இப்படி பறிமுதல் செய்யப்படும் கடத்தல் தங்கங்கள், 'செக்யூரிட்டி பிரின்டிங் அண்டு மின்டிங் கார்ப்பரேஷன் ஒப் இந்தியா' வாயிலாக ரிசர்வ் வங்கியிடம் வழங்கப்படுகிறது.

பின், அவை 1,113 கிலோ எடை உடைய தங்கக் கட்டிகளாக உருக்கப்பட்டு, மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கியிடம் பிடிபட்ட ஒரு மாத காலத்திற்குள் ஒப்படைக்கப்படுவதாக கூறப்படுகிறது.இது குறித்த தகவல்களை இந்திய ஊடகங்களும் வெளியிட்டுள்ளன.

 

 

 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்