day, 00 month 0000

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் கவாஜா அபார சதம் : ஸ்திரமான நிலையில் அவுஸ்திரேலியா

பேர்மிங்ஹாம் எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து குவித்த 393 ஓட்டங்களுக்கு பதிலலித்து துடுப்பெடுத்தாடும் அவுஸ்திரேலியா, உஸ்மான் கவாஜா குவித்த 15ஆவது டெஸ்ட் சதத்தின் உதவியுடன் ஸ்திரமான நிலையில் இருக்கிறது.

போட்டியின் இரண்டாம் நாளான சனிக்கிழமை (17) ஆட்ட நேர முடிவின்போது அவுஸ்திரேலியா அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 311 ஓட்டங்களைக் குவித்திருந்தது.

முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்கள் மீதம் இருக்க இங்கிலாந்தைவிட 82 ஓட்டங்கள் பின்னிலையில் அவுஸ்திரேலியா இருக்கிறது.

இங்கிலாந்து அதன் முதல் இன்னிங்ஸை 8 விக்கெட்களை இழந்து 393 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.

விக்கெட் இழப்பின்றி 14 ஓட்டங்களில் இருந்து தனது முதல் இன்னிங்ஸை இரண்டாம் நாள் காலை தொடர்ந்த அவுஸ்திரேலியா, மொத்த எண்ணிக்கை 29 ஓட்டங்களாக இருந்தபோது டேவிட் வோர்னர் (9), மார்னுஸ் லபுஸ்சான் (0) ஆகிய இருவரையும் கிறிஸ் ப்ரோடின் அடுத்தடுத்த பந்துகளில் அவுஸ்திரேலியா இழந்தது. (29 - 2 விக்.)

ஸ்டுவர்ட்  ப்றோடின் ஹெட்-ட்ரிக்கை ஸ்டீவன் ஸ்மித் தடுத்த போதிலும் அவர் 16 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (67 - 3 விக்.)

ஆனால், ஆரம்ப வீரர் உஸ்மான் கவாஜா, மத்திய வரிசை வீரர்களான ட்ரவிஸ் ஹெட், கெமரன் க்றீன், அலெக் கேரி ஆகியோர் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அவுஸ்திரேலியாவை ஸ்திரமான நிலையில் இட்டனர்.

இப் போட்டியில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய உஸ்மான் கவாஜா அபார சதம் குவித்து அணியைப் பலப்படுத்தினார்.

274 பந்துகளை எதிர்கொண்ட உஸ்மான் கவாஜா 14 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக 126 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காதிருந்ததுடன் மூன்று முக்கிய இணைப்பாட்டங்களில் பங்களிப்பு செய்திருந்தார்.

ட்ரெவிஸ் ஹெட்டுடன் 4ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களையும் கெமரன் க்றீனுடன் 5ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களையும் அலெக்ஸ் கேரியுடன் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 91 ஓட்டங்களையும் உஸ்மான் கவாஜா பகிர்ந்தார்.

உஸ்மான் கவாஜா 112 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது ஸ்டுவர்ட் ப்றோடின் பந்துவீச்சில் போல்ட் ஆனார். ஆனால் ப்றோட் வீசிய பந்து நோபோல் என கள மத்தியஸ்தர் அறிவித்ததால் உஸ்மான் கவஜா தொடர்ந்து துடுப்பெடுத்தாடி ஆட்ட நேர முடிவில் ஆட்டம் இழக்காதிருந்தார்.

ட்ரவிஸ் ஹெட் 50 ஓட்டங்களையும் கெமரன் க்றீன் 38 ஓட்டங்களையும் பெற்றார். அலெக்ஸ் கேரி 52 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

இங்கிலாந்து பந்துவீச்சில் ஸ்டுவர்ட்  ப்றோட்    49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மொயீன் அலி 124 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை (18) தொடரும்.

 

 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்