ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் (1656 முதல் 1796 வரை) இலங்கையில் இருந்து நெதர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட விலை மதிக்க முடியாத மிகப் பழமையான ஆறு ஆயுதங்களை இலங்கைக்கு வழங்க அந்நாட்டு அரசு உறுதியளித்துள்ளது.
இலங்கையின் பாரம்பரிய சிற்பங்கள் அடங்கிய பீரங்கி, லெவ்கே திஸாவுக்கு சொந்தமான வைரம் பதிக்கப்பட்ட வாள் உள்ளிட்டவை இவற்றில் அடங்கும்.
இந்த புராதன பொருட்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் கொழும்பு அருங்காட்சியகத்தில் விசேட குடிலில் வைக்கப்படும். இந்த குடில் நெதர்லாந்து அரசின் கண்காணிப்பின் கீழ் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
இந்த புராதன பொருட்களுக்கு காலநிலையால் எவ்வித சேதங்களுக்கு ஏற்படாத வகையில் குடில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இந்த பொருட்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட உள்ளன.
வெள்ளி, தங்கம் மற்றும் மாணிக்கக்கல் பதிக்கப்பட்ட வெங்கல பீரங்கி, மரத்தினால் செய்யப்பட்ட துப்பாக்கி, வண்டி, கனமான பிடியுடன் கூடி 136 வைரகற்கள் பதிக்கப்பட்ட வாள் உறை, அழகான சிறிய சிற்பங்களுடன் கூடிய இரண்டு துப்பாக்கிகள், இரும்பு வாள், இரும்பு உறை, தங்கமுலாம் பூசப்பட்ட சிறி துப்பாக்கி குழல், வெங்கல துப்பாக்கி என்பன இதில் அடங்கும்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் தலைமை அதிகாரியுமான சாகல ரத்நாயக்க, நெதர்லாந்து அரசிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இ்நத பொருட்களை இலங்கைக்கு வழங்க அந்நாட்டு அரசாங்கம் இணங்கியுள்ளது.