பாஜக-வுடன் திமுக கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூருக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பின்னர் ஜப்பான் சென்றுள்ளார். இந்நிலையில், சிங்கப்பூரில் தமிழ் நாளிதழுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், அதிமுக நான்கு அணிகளாக பிரிந்து கிடப்பதாகவும், அதனைப் பற்றி தாங்கள் கவலைப்படவில்லை என்றும் தெரிவித்தார். அவர்களது பலவீனத்தை வைத்து தாங்கள் அரசியல் செய்வதில்லை என்றும், தங்களது கொள்கையையும், தொண்டர் பலத்தையும் நம்பியே எப்போதும் செயல்பட உள்ளதாகவும் கூறினார்.
கருணாநிதி காலத்தில் இருந்ததைப் போன்று, பாஜக-வுடன் திமுக கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்று அவர் தெரிவித்தார். வாஜ்பாய் தலைமையிலான அப்போதைய பாஜக-வுக்கும், தற்போதைய பாஜக-வுக்கும் நிறைய வேறுபாடு இருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். மேலும், அமைச்சராக உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக முதலமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
வடமாநில தொழிலாளர்களின் வருகையால், தமிழ்நாட்டுக்கு நன்மையே தவிர தீமை கிடையாது என்றும் அவர் விளக்கம் அளித்தார். உலகின் எந்தப் பகுதியில் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம் என்று முதலமைச்சர் உறுதியளித்தார்.