// print_r($new['title']); ?>
day, 00 month 0000

இங்கிலாந்துடனான ஒப்பந்தத்தை துண்டித்தார் ஜேசன் ரோய்

பணம் கொழிக்கும் தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றும் நோக்கத்துடன் இங்கிலாந்தின் ஜேசன் ரோய் தனது தேசிய கிரிக்கெட் ஒப்பந்தத்தை முடிவுறுத்திக்கொண்டுள்ளார்.

தொழில்முறை கிரிக்கெட் விளையாடுவதற்காக தேசிய ஒப்பந்ததைத்தை முடிவுறுத்திக்கொண்ட முதலாவது இங்கிலாந்து வீரர் ஜேசன் ரோய் ஆவார்.

அமெரிக்க மேஜர் லீக் கிரிக்கெட் போட்டியில் ஒரு பருவகாலத்திற்கு 150,000 பவுண்ட்களை சம்பாதிக்கும் நோக்கத்தில் 60,000 - 70,000 பவுண்ட் ஒப்பந்தத்தைக் கைவிட  ஆரம்ப அதிரடி வீரர் ஜேசன் தீர்மானித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும் தேசிய அணி தேர்வுக்கு 32 வயதான ஜேசன் ரோய் தயாராகவே இருக்கிறார்.

'மிகத் தெளிவாகக் கூறுவதென்றால், நான் இங்கிலாந்து அணிக்கே முன்னுரிமை அளிப்பேன். உலகக் கிண்ணம் நெருங்கி வருகின்ற இவ்வேளையில் இங்கிலாங்துக்கு விளையாடுவதை விரும்புகிறேன்' என ஜேசன் ரோய் தெரிவித்தார்.

'எனக்கும் சரி, வேறெந்த வீரருக்கும் சரி, அவரவர் நாட்டிற்காக விளையாடுவதே மிகப் பெரிய கௌவரமாகும். இங்கிலாந்து  அணியை விட்டு வெளியேறமாட்டேன் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்' என சமூக ஊடகத்தில் ஜேசன் ரோய் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 'ஐக்கிய அமெரிக்காவில் இந்தக் கோடைக்காலத்தின் பிற்பகுதியில் மேஜர் லீக் கிரிக்கெட் ஒப்பந்தத்தை ஏற்கவுள்ளதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபைக்கு  ஜேசன் ரோய் அறிவித்துள்ளார்' என சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபையுடனான எஞ்சிய சம்பள உயர்வுடனான ஒப்பந்தத்தை  ஜேசன் ரோய்   வைட விரும்பினால் தொழில்முறை கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை அனுமதிக்கிறது. இதற்கு இருதரப்பினரும் உடன்பட்டுள்ளனர்' என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

'இந்த முடிவு ஜேசனின் இங்கிலாந்து அணிக்கான தேர்வில் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதை தெளிவுபடுத்த இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை விரும்புகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாடவேண்டும் என்பதில் ஜேசன் ரோய் அர்ப்பணிப்புடன் இருக்கிறார் என்பதில் எமக்கு (சபைக்கு) திடமான நம்பிக்கை இருக்கிறது' எனவும் சபை குறிப்பிட்டுள்ளது.

2019 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து சம்பியனான காலப்பகுதியில் ஜேசன் ரோய் அணியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்துள்ளார். எவ்வாறாயினும் துடுப்பாட்டத்தில் சரிவு ஏற்பட்டதன் காரணமாக அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் இல்லாமலேயே கடந்த வருடம் நடைபெற்ற இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து சம்பியனாகி இருந்தது.

இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைட்ஸ் அணிக்காக விளையாடிவந்த ஜேசன் ரோய், அமெரிக்காவில் லொஸ் ஏஞ்சலிஸ் நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்