புத்தரையும் ஏனைய மதங்களையும் புண்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கிறிஸ்தவ மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, இன்று (21) நாடு திரும்புவதாக முன்னர் அறிவித்திருந்த போதிலும், அவர் இன்னும் நாடு திரும்பவில்லை.
எவ்வாறாயினும், ஸூம் தொழில்நுட்பம் மூலம் இலங்கையில் நடைபெற்ற ஒரு ஆராதனையில் அவர், பௌத்த, இந்து மற்றும் இஸ்லாமிய பக்தர்களிடம் தனது அறிக்கையால் ஏற்பட்ட காயத்திற்கு மன்னிப்பு கோருவதாகக் கூறினார்.
ஆனால் அன்றைய தினம் தான் கூறியது உண்மை என அவர் இன்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
புத்தர் மற்றும் பிற மதத்தினரைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கிறிஸ்தவ போதகர் ஜெரம் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு பல தரப்பினரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில், விசாரணையும் நடைபெற்று வருகிறது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றில் தடை உத்தரவையும் பெற்றுள்ளனர்.
இவ்வாறானதொரு சூழலில் ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ நாட்டை விட்டு வெளியேறியதாகவும், ஞாயிற்றுக்கிழமை, அதாவது இன்று இலங்கை திரும்புவதாகவும் அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
எனினும், இதுவரை அவர் நாடு திரும்பியதாக தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், இன்றைய தினம் தொடர்பான ஞாயிறு ஆராதனை கட்டுநாயக்க மிராக்கிள் டோம் மண்டபத்தில் நடைபெறாது என போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தனது முகநூல் கணக்கில் நேற்று (20) பதிவு செய்துள்ளார்.
குறித்த சேவை தெஹிவளையில் வேறொரு இடத்தில் இடம்பெறும் எனவும், Zoom ஊடாக தொடர்பு கொள்ள முடியும் எனவும் அந்த குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இன்று பிற்பகல் ஆராதனை இடம் மீண்டும் ஒருமுறை மாற்றப்பட்டதுடன், நுகேகொட பிரதேசத்தில் ஒரு இடத்தில் ஆராதனை இடம்பெற்றதாக ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவின் முகநூல் கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி இன்று பிற்பகல் அந்த இடத்தில் உரிய ஆராதனை இடம்பெற்றதுடன் சிங்கப்பூரில் இருந்து Zoom ஊடாக இணைந்த ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ தனது சீடர்களிடம் உரையாற்றினார்.
இவ்வாறானதொரு பின்னணியில் இன்று காலை ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவிற்கு சொந்தமான கட்டுநாயக்க மிராக்கிள் டோம் மண்டபத்திற்கு முன்பாக பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.